உடுமலை:உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில், இரு நாட்களாக மழை பெய்து வருவதால், குளிர் சீதோஷ்ண நிலை நிலவுகிறது.உடுமலை பகுதிகளில், இம்மாதம், காலை, மாலை நேரங்களில் பனிப்பொழிவும், பகல் நேரத்தில் வெயிலின் தாக்கமும் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், கடந்த இரு நாட்களாக, இடியுடன் கனமழை பெய்கிறது. நேற்று பெய்த கனமழையால், ரோடுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழை நீர் வெளியேற வழியில்லாமல், பல இடங்களில் தேங்கியது. வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், இரு நாட்களாக குளிர் சீதோஷ்ண நிலை மாறியுள்ளது.இந்நிலையில், சாகுபடி செய்யப்பட்டிருந்த, மக்காச்சோளம், நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடக்கிறது. திடீர் மழை காரணமாக, களங்களில் இருந்த, தானியங்கள் பாதிக்கப்பட்டது.தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களுக்கு தற்போது பெய்த மழை பயனுள்ளதாக அமைந்துள்ளது. மடத்துக்குளம் பகுதியில் நேற்று பகல், 12:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை பரவலாக கனமழை பெய்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.பொதுமக்கள் கூறுகையில், 'இந்த மாதத்தில் மழையை எதிர்பார்க்கவில்லை. மழையால், கோடையின் வெப்பம் தணிந்து, குளிர்ச்சியை வழங்கி மகிழ்வித்தது' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE