புதுச்சேரி துணைநிலை கவர்னர் கிரண் பேடி திடீரென நீக்கப்பட்ட விவகாரம், டில்லி அரசியல் வட்டாரங்களில் அதிகமாக அலசப்படுகிறது. ஒரு கவர்னரை மாற்றும் போது, அதுபற்றிய தகவல், அவருக்கு முதலில் தெரிவிக்கப்படுவது வழக்கம்.
ஆனால் கிரண் பேடி விவகாரம், மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. 'டிவி' பார்த்து தான், அவர் அந்த விஷயத்தை தெரிந்து கொண்டாராம்.புதுச்சேரியின், பா.ஜ., பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட இரண்டு தலைவர்கள், சமீபத்தில் அங்கு வந்து, அரசியல் நிலவரம் குறித்து ஆராய்ந்தனர். 'கிரண் பேடியை வைத்து தான் காங்., பிரசாரம் செய்ய உள்ளது' என, கட்சி மேலிடத்திடம், இந்த குழு அறிக்கை அளித்தது.
மற்றொரு பக்கம், சமீபத்தில், பா.ஜ.,வில் சேர்ந்த நமச்சிவாயம் உட்பட பலரும், 'நாராயணசாமியின் பிரசாரம், கிரண் பேடியை வைத்துதான் இருக்கும்' என, கட்சி மேலிடத்திடம் கூறினர். இதையடுத்து, பா.ஜ., வின் வெற்றி, கிரண் பேடியால் பாதிக்கக் கூடாது என்பதால், அவரை நீக்க, உள்துறை அமைச்சகத்தில் இருந்து உத்தரவு வெளியானது.இதையெல்லாம் மீறி, வேறொரு காரணமும் சொல்லப்படுகிறது; அது, சாராய வியாபாரிகள் லாபி. தமிழகத்தை விட புதுச்சேரியில் மது விலை மலிவு என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆனால், கொரோனா சமயத்தில் வரியை உயர்த்திவிட்டார் கிரண் பேடி. இது சாராய லாபிக்கு பெரும் அடி. இந்த லாபிக்கும், அரசியலுக்கும், எப்போதுமே அதிக தொடர்பு. கட்சி பேதம் பார்க்காமல் தேர்தலுக்கு பணத்தை அள்ளிக் கொடுப்பவர்கள் சாராய தொழிலதிபர்கள். அவர்களும், கிரண் பேடிக்கு எதிராக, பா.ஜ., விடம் புகார் அளித்திருந்தனர்.
பிரியங்காவுக்கு உதவிய அமைச்சர்
அடுத்த ஆண்டு உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், கோவில்களுக்கு போவது, பண்டிகை தினங்களில் கங்கையில் குளிப்பது என, வாக்காளர்களை வசியப்படுத்த, ராகுலும், பிரியங்காவும் முடிவெடுத்துள்ளனர்.
தை அமாவாசை வட மாநிலங்களில், மிகவும் பய பக்தியுடன் கொண்டாடப்படும். அன்று, அலகாபாத் சங்கமத்தில் நீராடுவது என முடிவெடுத்தார் பிரியங்கா. போக்குவரத்து நெருக்கடி அதிகமாக இருக்கும் என்பதால், அங்கு, பிரியங்காவை எப்படி அழைத்துச் செல்வது என, கட்சித் தலைவர்கள் ஆலோசித்தனர். அலகாபாதில் ராணுவம் உள்ள, 'கன்டோன்மென்ட்' பகுதி வழியாக காரில் சென்று, அங்கிருந்து வசதியாக படகில் சங்கமத்துக்கு போகலாம்; போக்குவரத்து பிரச்னையும் இருக்காது;
ஆனால், இதற்கு ராணுவ அமைச்சகத்தின் அனுமதி தேவை.காங்., - எம்.பி., ஒருவர், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு போன் செய்து, விஷயத்தைச் சொல்லி, 'அனுமதி தர முடியுமா?' என, கேட்டார்.ராஜ்நாத்தும், உடனடியாக அனுமதி வழங்கிவிட்டார்; பின், எந்த பிரச்னையும் இல்லாமல் சங்கமத்தில் நீராடினார் பிரியங்கா. காங்கிரசார் உடனே இந்த புகைப்படங்களை மீடியாவில் கொடுத்து, 'காங்கிரஸ் ஹிந்துக்களுக்கு விரோதமான கட்சி இல்லை' என, செய்தி கொடுத்தனர்.
அன்று மாலை, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்த காங்கிரஸ் எம்.பி.,க்கு போன் செய்து, 'எல்லாம் நல்லபடியாக முடிந்ததா... பிரியங்காவிற்கு எந்த பிரச்னையும் இல்லையே' என, அன்பாக விசாரித்தாராம். 'உ.பி., காங்கிரசார், ராஜ்நாத் சிங் மீது, மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். இதேபோல மேற்கு வங்க முதல்வர் மம்தாவும், ராஜ்நாத் சிங் பற்றி விமர்சிப்பதே இல்லை' என்கின்றனர், பா.ஜ., நிர்வாகிகள்.
சட்டசபை தேர்தல் எப்போது?
அடுத்த வாரத்தில் தமிழகம், உட்பட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட உள்ளன. தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, ஏப்., 12ம் தேதி பதவி ஓய்வு பெறுகிறார். இவருக்கு தமிழகத்தின் மீது பாசம் அதிகம். எப்போது தமிழகம் வந்தாலும், முக்கியமான கோவில்களுக்கு செல்வார். தான் ஓய்வு பெறுவதற்கு முன், தமிழக தேர்தலை நடத்த விரும்புகிறார்.
இதனால், ஏப்., 12ம் தேதிக்கு முன், தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு சட்டசபை தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது. ஓய்வு பெற்ற பின், தன் அனுபவங்களை புத்தகமாக எழுத உள்ளார் அரோரா. தமிழகத்தைப் பற்றியும் விலாவாரியாக எழுதப்போகிறாராம்.'ரஜினி ஆரம்பிக்கவிருந்த அரசியல் கட்சிக்கு ஆட்டோ சின்னம் எப்படி கிடைத்தது... அதில் நெருக்கடி கொடுக்கப்பட்டதா' என்றெல்லாம், அந்த புத்தகத்தில் எழுதப்போகிறாராம் சுனில் அரோரா.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE