கோவை:கோவையில், 'டமருகம்' கற்றல் மையம் சார்பில், கி.ராஜநாராயணன் எழுதிய, 'மிச்சக் கதைகள்' நுால் வெளியீட்டு விழா, நேற்று கிக்கானி பள்ளி அரங்கில் நடந்தது. நுாலை எழுத்தாளர் ஜெயமோகன் வெளியிட, நாஞ்சில்நாடன் பெற்றுக்கொண்டார்.நுால் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் பேசுகையில், ''ஒரு நிலத்தில் வாழும் மக்களின் முழு வாழ்க்கையையும், நவீன இலக்கிய எழுத்தாளர்களால் தங்கள் படைப்பில் சொல்ல முடியவில்லை. ஆனால், கி.ரா., மட்டும் தன் படைப்புகளில், அதை முழுமையாக சித்தரித்து இருக்கிறார். அவர் வாழ்ந்த மண்ணில் இருந்த அத்தனையும், அவரது எழுத்துக்களில் இருக்கின்றன,'' என்றார்.எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பேசுகையில், 'கி.ரா.வை வட்டார எழுத்தாளர் என்று சொல்லி, ஒரு வட்டத்துக்குள் குறுக்கி விடக்கூடாது. அவரை சுற்றி வாழ்ந்த மக்களும், மண்ணும், அதன் தனித்துவமான பண்பாடும், அவரோடு சேர்ந்து படைப்புகளாக வந்துள்ளன. அப்படி அவர் தனித்துவமாக எழுதியதால் தான், கி.ரா.வை 'முன்னத்தி ஏர்' என்று சொல்கிறோம்.எழுதப்பட்டவை மறுபடியும் பேசப்பட வேண்டும். கி.ரா.,வின் கதைகள் இன்றும் மக்களால் பேசப்படுகின்றன. ஒருவேளை எதிர்காலத்தில் அச்சு பதிப்பு இல்லாமல், புத்தகங்கள் வராமல் போனாலும், கி.ரா.,வின் கதைகளை, வாய் மொழியாக மக்கள் பேசிக்கொண்டே இருப்பார்கள்,'' என்றார்.கோவை புத்தகத்திருவிழா தலைவர் விஜய் ஆனந்த், எழுத்தாளர்கள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE