கோவை:கோவை மாவட்டத்தில், 159 அரசு, அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில், மியாவாக்கி முறையில் மரக்கன்று நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.மாவட்ட சுற்றுச்சூழல் மன்றம் சார்பில், நீர் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை என்ற தலைப்பில், கோயமுத்துார் பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரியில், நேற்று முன்தினம், பயிற்சி பட்டறை நடந்தது. இதில், 159 அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் மட்டும் பங்கேற்றன. நிகழ்ச்சியில் நம் முன்னோர்கள், நீர் சேமிக்க பயன்படுத்திய முறைகள், மழை நீர் சேமிப்பதன் அவசியம், 48 வகையான நீராதாரங்கள் குறித்து விளக்கப்பட்டது.பயிலரங்கத்தை, டி.இ.ஓ., (பொறுப்பு) ராஜலட்சுமி துவக்கி வைத்தார். சத்தியமங்கலம் பிரிவில் உள்ள, தமிழ்நாடு வேளாண் பல்கலை உதவி பேராசிரியர் வள்ளியம்மை, இயற்கை வளங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.மாவட்ட சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் லோகாம்பாள் கூறுகையில், '' கோவை மாவட்டத்தில், உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில், மழைநீர் சேமிக்க, தேவையான ஏற்பாடுகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு இல்லாத பள்ளிகள், முறையாக பராமரிக்காத பள்ளிகளுக்கு, இக்கட்டமைப்பு ஏற்படுத்தி தரப்படும்.இதோடு, 159 பள்ளிகளில், ஒரு சென்ட் இடத்தில், மியாவாக்கி முறையில், வறட்சியை தாங்கி வளரும் நாட்டுமரங்கள், விரைவில் நடவு செய்யப்படும். இதை பராமரிக்கும் பொறுப்பு மாணவர்களிடம் ஒப்படைக்கப்படும்,'' என்றார்.நிகழ்ச்சியில், சி.ஐ.இ.டி., கல்லுாரி முதல்வர் நாகராஜன், பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் பாபு வினோத்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE