கோவை:மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும் மானியத்துடன் தொழில்முனைவோர் கடன் மேம்பாட்டுத்திட்டம், வங்கிகளின் போதிய ஒத்துழைப்பு இன்றி சுணக்கம் அடைந்துள்ளது. கடந்த ஏழு மாதங்களில், 735 விண்ணப்பங்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன.
வங்கிகளுடன் கலந்தாலோசித்து, பிரச்னைக்கு தீர்வு காண, மாவட்ட கலெக்டர் முன்வர வேண்டும். தொழில்முனைவோரை உருவாக்குதல், ஊக்குவித்தல் அடிப்படையில், என்.இ.இ.டி.எஸ்., யு.ஒய்.இ.ஜி.பி., பி.எம்.இ.ஜி.பி., ஆகிய மூன்று திட்டங்களின் கீழ், மானியத்துடன் வங்கிகள் மூலம் தொழில் கடன் வழங்கப்படுகிறது.50 ஆயிரம் முதல் 5 கோடி ரூபாய் வரை, கடன் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. 50 லட்சம் ரூபாய் வரை, பெரிய அளவிலான தொழில் கடன்களுக்கு, அரசு மானியம் வழங்கப்படுகிறது. கோவை மாவட்ட தொழில் மையம் மூலம், தொடர்ந்து தொழில்முனைவோர் கடன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. தொழில் துவங்க, விரிவுபடுத்த, மேம்படுத்த, நிலம் வாங்க, உபகரணங்கள், இயந்திரங்கள், வியாபாரம் போன்றவற்றுக்கு கடன் வழங்கப்படுகிறது.தொழில் மைய அதிகாரிகள் விண்ணப்பங்கள் பெற்று, உரிய ஆய்வுக்கு பின்னரே கடன் வழங்க வங்கிகளுக்கு, பரிந்துரை செய்கின்றனர்.
வங்கிகள் கடன் வழங்க மறுப்புஆனால், வங்கிகள் பெரும்பாலும், வெற்றிகரமாக செயல்பட்டு தொழிலை விரிவுபடுத்த கோரி வரும், விண்ணப்பங்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கின்றனர்.புதிதாக தொழில் துவங்குபவர்கள், சிறிய அளவிலான வியாபாரங்கள், மகளிர் சுய உதவிக்குழு பெண்களின் தொழில்முனைவோர் கடன் போன்றவை, பெரும்பாலும் பல்வேறு காரணங்களால் நிலுவையில் வைக்கப்படுகிறது.
வங்கிகளின் இதுபோன்ற செயல்பாடுகளால், யு.ஒய்.இ.ஜி.பி., எனப்படும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், இளைஞர்கள் பலர் விண்ணப்பிக்க முன்வருவதில்லை.கல்வித்தகுதி குறைந்தபட்சம், எட்டாம் வகுப்பு என்பதாலும், வேலை வாய்ப்பற்றவர்களுக்கான திட்டம் என்பதாலும், வங்கிகள் கடன் தர முன்வருவதில்லை என கூறப்படுகிறது. வங்கிகளின் இச்செயல்பாடுகள் குறித்து, தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் வரப்பெற்று, கூட்டம் நடத்தி உரிய அறிவுறுத்தல்களும், வங்கி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது. இருப்பினும், கடன் கோரும் விண்ணப்பங்கள் வங்கிகளில் துாங்குகின்றன.இதுகுறித்து, மாவட்ட தொழில் மைய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'வங்கிகளின் ஒத்துழைப்பு போதுமான அளவில் இல்லை என்பது உண்மைதான். கடந்த 7 மாதங்களில் அனுப்பப்பட்ட விண்ணப்பங்களில், 735 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. வங்கிகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டும், போதிய ஒத்துழைப்பு இல்லை. இதுகுறித்து, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம்' என்றார். வங்கிகள் பெரும்பாலும், வெற்றிகரமாக செயல்பட்டு தொழிலை விரிவுபடுத்த கோரி வரும், விண்ணப்பங்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கின்றனர்.
புதிதாக தொழில் துவங்குபவர்கள், சிறிய அளவிலான வியாபாரங்கள், மகளிர் சுய உதவிக்குழு பெண்களின் தொழில்முனைவோர் கடன் போன்றவை, பெரும்பாலும் பல்வேறு காரணங்களால் நிலுவையில் வைக்கப்படுகிறது.
கலெக்டர் சார்... கவனிங்க!
விண்ணப்பதாரர்கள் சிலர் கூறுகையில், 'வேலைகளை உருவாக்குபவராக மாறுங்கள் இளைஞர்களே...' என கூறுகிறது மத்திய அரசு. விண்ணப்பித்தால், கடன் கிடைப்பதில்லை. மானியத்துடன் அரசு செயல்படுத்தும் திட்டங்கள், உரியவர்களை சென்றடைய, குறுக்கிடும் சிக்கல்களை, கண்டறிய வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் கடமை' என்கின்றனர்.இது குறித்து, வங்கிகளுடன் உடனடியாக கலெக்டர் ஆய்வு கூட்டம் நடத்த வேண்டியது அவசியம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE