நாகர்கோவில்: ''காங்., கட்சியை பொறுத்தமட்டில் தமிழக சட்டசபையில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும். பழையன கழியும், புதியன புகும் என்ற அடிப்படையில் புதிய வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர்'' என தமிழக காங்., தலைவர் கே.எஸ். அழகிரி கூறினார்.
கன்னியாகுமரியில் மார்ச் 1ல் காங்., எம்.பி., ராகுல் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். இதையொட்டி கே.எஸ்.அழகிரி மாவட்ட நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அதன்பின் மேலும் அவர் கூறியதாவது:பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை குறைக்க எந்த திட்டமும் மோடி அரசிடம் இல்லை. மோடி மூன்று மாதத்திற்கு ஒரு முறை புதிய பிரச்னையை ஏற்படுத்தி வருகிறார்.
பிரச்னைகளை தீர்க்க முடியாமல் மோடி அரசு தோல்வி அடைந்துள்ளது.சிறுபான்மை மக்களின் போராட்டங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற்றாலும் அவர்களின் வாக்கு அ.தி.மு.க.,விற்கு கிடைக்காது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இரண்டாவது கல்லை கூட எடுத்து வைக்கவில்லை. இது அ.தி.மு.க., அரசின் தோல்விக்கான சான்று.கமல், ரஜினி நண்பர்கள். அவர்கள் சந்திப்பது அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாதுதமிழக காங்கிரஸ் செயற்குழு பிப்.,24ல் கூடுகிறது. அதன்பிறகு தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் குறித்து முடிவெடுப்போம். தி.மு.க.,- காங்கிரஸ் கூட்டணியில் புதிய கட்சிகள் இடம்பெற வாய்ப்பு இல்லை.
எங்கள் அணியில் கூட்டணிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. புதுச்சேரியில் நாராயணசாமி அரசு கவிழாது. இந்த முயற்சியில் பா.ஜ. தோல்வியை சந்திக்கும்'' என்றார்.இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ., விஜயதரணிக்கு எதிராக தொண்டர்கள் கோஷமிட்டனர். அவர்களை புல்லுருவிகள் என விஜயதரணி விமர்சித்தார். இச்சம்பவங்களை அழகிரி கண்டுகொள்ளவில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE