திருப்பூர்:சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே, முதல்வர் பழனிசாமியும், தி.மு.க., தலைவர் ஸ்டாலினும், முதல் கட்ட பிரசாரத்தை நிறைவு செய்துள்ளதால், திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,வினர் உற்சாகமடைந்துள்ளனர். அனல் பறக்கும் பிரசாரத்தை துவக்க, அரசியல் கட்சிகள், ஆர்வத்துடன் உள்ளன.
எட்டு சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய திருப்பூர் மாவட்டத்தில், சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு முன்பே, தேர்தல் பிரசாரம், களை கட்டியுள்ளது.முதல்வர் பழனிசாமி, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், காங்., முன்னாள் தலைவர் ராகுல், மக்கள் நீதி மையம் தலைவர் கமல் உள்ளிட்டோர், முதல் கட்டப் பிரசாரத்தை நிறைவு செய்துள்ளனர். தி.மு.க., எம்.பி., கனிமொழி, திருப்பூரில், மகளிர் கிராமசபா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
பிரதமர் மோடி, வரும் 25ம் தேதி, கோவை வர உள்ளார். இதில், பங்கேற்க, திருப்பூர் மாவட்ட பா.ஜ.,வினர் தயாராகியுள்ளனர். மாநில துணைத்தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர், அடிக்கடி, திருப்பூர் மாவட்டத்தில், பா.ஜ., நிகழ்ச்சிகள் மற்றும் பொதுக்கூட்டங்களில், கலந்துகொண்டு வருகின்றனர்.மார்க்சிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, நேற்று, திருப்பூர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதாக இருந்தது. இது, ஒத்திவைக்கப்பட்டுள்ளது.தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், வராவிட்டாலும், சமீபத்தில் பிரேமலதா, பல்லடம் பகுதிக்கு வந்து சென்றார். அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., கூட்டணிகளில் இடம்பெற்ற, பல்வேறு கட்சிகளின் தலைவர்களின் பிரசாரமும், விரைவில் களைகட்ட உள்ளது.
அவிநாசி - அத்திக்கடவு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதை, மாவட்டத்தில், பிரசாரத்தின்போது, அ.தி.மு.க.,வினர் பிரதானப்படுத்தி வருகின்றனர். கல்விக்கடன் ரத்து உட்பட பல்வேறு வாக்குறுதிகளும், தி.மு.க.,வினரால் அளிக்கப்பட்டு வருகிறது.நுால் விலை உயர்வால், பின்னலாடை தொழில் பாதிக்கப்பட்டுள்ளதை, தி.மு.க., - காங்., உள்ளிட்ட கட்சிகள் கையில் எடுத்துள்ள நிலையில், அ.தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள், இதற்கு தீர்வு காணப்பட உள்ளதையும், தொழில்துறைக்காக நிறைவேற்றிய திட்டங்களையும் பட்டியலிட்டு வருகின்றன.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், தலைவர்களின் பிரசார திட்டத்துக்கு உரிய நேரம் இருக்காது என்பதால், தற்போதே, ஒவ்வொரு கூட்டங்களையும், அரசியல் கட்சியினர் பிரசாரமாக மாற்றி வருகின்றனர்.முதல்வர் பழனிசாமி, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர், திருப்பூருக்கு, இரண்டாம் கட்டமாகவும் பிரசாரத்துக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அப்போது, திருப்பூர் மாவட்டம் தொடர்பான மேலும் பல வாக்குறுதிகளை அவர்கள் அளிக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே, வாக்குறுதிகளை கட்சியினர் அள்ளித் தருவதால், மக்கள் ஆச் சர்யம் மேலிட்டுள்ளனர்.விவசாயம் மற்றும் தொழில்துறையை இரு கண்களாக கொண்டுள்ள இந்த மாவட்டத்தில், விரைவில்,அனல் பறக்கும் பிரசாரத்தையும் பார்க்கலாம்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE