திருப்பூர்:கடந்த 2019 ஜன., 1 முதல், ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள், தமிழகத்தில், தடை செய்யப்பட்டன. அரசு, இத்தடையை கண்டிப்புடன் அமல்படுத்த துவங்கியது. மக்களும் மாற்றத்துக்கு தயாராயினர். ஆனால், மெல்ல மெல்ல, இது வீழ்ச்சியடைந்து, தற்போது, பிளாஸ்டிக் பயன்பாடு, அமோகமாகிஉள்ளது.தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுப்படி, 'பிளாஸ்டிக்' இல்லாத பசுமை சுற்றுச்சூழலை உருவாக்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநிலம் தோறும், ஒரு மாதிரி மாவட்டத்தை அறிவித்து, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் திட்டங்களை செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில், திருப்பூர் மாவட்டம் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. தொழில் நகரமாக விளங்கும் திருப்பூர் மாநகரம் உட்பட மாவட்டம் முழுதும், இத்திட்டத்தை வெற்றிகரமாக சாதித்துக்காட்டுவதில், தொழில்துறையினர் உட்பட பொதுமக்களின் பங்கு முக்கியமானதாக இருக்கும்.பிளாஸ்டிக் மோகம் ஏன்...எளிய பயன்பாடு, கண் கவர் வண்ணம், குறைந்த எடை உள்ளிட்டவை, பிளாஸ்டிக் மீதான மக்களின் மோகத்திற்கான காரணங்களாக உள்ளன.இருப்பினும், பிளாஸ்டிக்கின், மக்களுக்குத் தேவையான சராசரிப் பயன்பாடு என்பது, முப்பது நிமிடத்தைத் தாண்டுவதில்லை. பத்து சதவீதத்திற்கும் கீழாகத் தான் மறுசுழற்சி செய்யப்படுகிறது.பிளாஸ்டிக் தடை அமலானதும், வாழையிலை, பாக்கு இலை, தாமரை இலை, காகிதச் சுருள், துணி, சணல், உலோகங்கள், பீங்கான் என மாற்றுப்பொருட்கள் பயன்பாடு அதிகரித்தது. பலர், கரண்டியில் கூட, மண் கரண்டியைப் பயன்படுத்தினர்.கடைகளில், டீ, சாம்பார் போன்றவற்றை வாங்க, துாக்கு வாளிகளைப் பயன்படுத்த துவங்கினர். மஞ்சள் பைகளை மக்கள், கடைகளுக்கு பொருட்கள் வாங்க எடுத்துவந்தனர். ஆனால், அதிகாரிகளும், மக்களும் நாளடைவில், பிளாஸ்டிக் தடையை அலட்சியப்படுத்த, மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துவிட்டது. குறிப்பாக, ஊரடங்குக்கு பின், எந்தக் கட்டுப்பாடுகளும் இன்றி, பிளாஸ்டிக் தடையையே மக்கள் மறந்துவிட்டனர்.தடை எதற்காக...பிளாஸ்டிக் மக்குவதில்லை. மண்ணில் வீசப்படும் பிளாஸ்டிக், சுற்றுச்சூழலை சீர்கெடுக்கிறது.சாக்கடைகளை பாலிதீன் கவர்கள் அடைத்துக்கொள்வதால், கழிவுநீர் செல்வதில்லை. மண்ணில் புதைவதால், மழைநீர், மண்ணுக்குள் இறங்குவதில்லை. காற்றையும் கெடுக்கிறது.பிளாஸ்டிக் குப்பைகள் தேங்குவதால், தொற்று நோய்க்கும் வழிவகுக்கிறது. மழைக்காலத்தில், மழைநீரை, மண் ஈர்க்காமல், வெள்ளக்காடாக காட்சியளிக்கவும், காரணமாக அமைகிறது.பிளாஸ்டிக்கை எரிப்பதால் உருவாகும் டையாக்சின் வாயு, புற்றுநோயை உருவாக்கும் அபாயமும் உள்ளது. விலங்குகள் பாலிதீன் கலந்த தீவனம் அல்லது உணவுப்பொருட்களை உண்பதால், இறக்கும் அவலமும் நேரிடுகிறது. விவசாயத்திலும், பயிர் வளர்ச்சியைக் கெடுக்கிறது.திருப்பூர் சாதிக்கும்சுற்றுச்சூழல் தொடர்பான திட்டங்களை ஏற்று செயல்படுத்துவதில், திருப்பூர், ஒரு வழிகாட்டியாக இருக்கிறது. தொழில் நகராக விளங்கினாலும், தொழில்துறையினரிடமும், தொழிலாளரிடமும், சுற்றுச்சூழல் காக்கும் அக்கறை, அதிகமாக காணப்படும் நகராக உள்ளது.மாநிலத்தில், பிளாஸ்டிக் இல்லா முன்மாதிரி மாவட்டமாக, உருவாக்குவதற்கான சபதம், திருப்பூர் மாவட்ட மக்கள், ஒவ்வொருவரின் இதயத்தில் இருந்தும் எழ வேண்டும். எதிர்கால தலைமுறையினருக்கும், இந்த மண் உதவ வேண்டுமானால், இதை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும் என்றால், இந்த சபதத்தை எந்நாளும் காப்போம் என்கிற உறுதி பூணுவோம்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE