'இந்த பழைய பாட்டை, இவர் இன்னும் எத்தனை நாளைக்குத் தான் பாடி, நம்மை ஏமாற்றுவார் என்று தெரியவில்லை' என, முன்னாள் பிரதமர் தேவகவுடாவை கிண்டலடிக்கின்றனர், அவரது மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியினர். தேவகவுடா, கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர். பிரதமர், மத்திய அமைச்சர் என, பல பதவிகளை வகித்த அனுபவம் உடையவர்; 87 வயதாகி விட்டது.
கர்நாடக மாநில அரசியலில், அவரது மகன்கள், குமாரசாமி, ரேவண்ணா போன்றோர் தலையெடுத்து, அதற்கு பின், அவரது பேரன்களும் இப்போது கோலோச்சுகின்றனர். ஆனாலும், தேவகவுடாவுக்கு இன்னும் பதவி ஆசை போகவில்லை. கடந்த முறை தேர்தலில் போட்டியிட்டபோது,'இது தான், என் கடைசித் தேர்தல். இதற்கு பின், அரசியலில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன்' என, கூறினார். அதற்கு பின், ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்டார்.
கர்நாடக மக்களையும், கட்சி நிர்வாகிகளையும் உணர்ச்சிகரமாக பேசி, தன் வயப்படுத்துவதற்காக, ஒவ்வொரு முறையும், இந்த 'கடைசி தேர்தல்' ஆயுதத்தை, அவர் பயன்படுத்துவது வழக்கம். சமீபத்தில், ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், 'எனக்கு வயதாகி விட்டது. நீண்ட துாரம் பயணிக்க முடியவில்லை. தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். கட்சிக்கு, ஆலோசனைகளை மட்டும் வழங்குவேன்' என்றார்.
கர்நாடக மக்களும், கட்சி நிர்வாகிகளும், 'இனியும் இதுபோல் பேசி, எங்களை அவர் ஏமாற்ற முடியாது. காலம் மாறிப் போச்சு' என, குமுறுகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE