சுப்ர.அனந்தராமன், காஞ்சிபுரத்திலிருந்து எழுதுகிறார்:
குஜராத் நீதிமன்றத்தின் வைர விழா நிகழ்ச்சியின்போது, 'பிரதமர் நரேந்திர மோடி, மிகவும் அன்பான, துடிப்பான, தேச மற்றும் தெய்வ பக்தியுள்ள, முற்போக்கு சிந்தனை மிக்க தலைவர்' என, உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷா புகழ்ந்து தள்ளியுள்ளார்.பிரதமர் மோடியும், நீதிபதி ஷாவும், குஜராத்தைச் சேர்ந்தோர்.
ஆனாலும் நீதிபதியாக இருப்பவர், பிரதமரை புகழ்ந்து பேசியது, அவரது உள்நோக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.ஒரு சில ஆண்டுகளில் ஓய்வு பெற உள்ள நீதிபதிகள் சிலர், பதவியில் இருக்கும் போது, ஆளுங்கட்சியினரை புகழ்வது தொடர்ந்து வருகிறது. வழக்குகளில் கூட, ஆளுங்கட்சியினரின் மனம் நோகாமல் தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
அதற்கு காரணம், ஓய்வு பெற்ற பின் அவர்களுக்கு கவர்னர் பதவியோ, ராஜ்யசபா எம்.பி., பதவியோ கிடைக்கும் என்பது தான்.அப்போது தானே, ஓய்வு பெற்ற பிறகும் சில லட்சம் ரூபாய் சம்பளம், சொகுசான அரசு பங்களா, கார் மற்றும் ஊழியர்கள் சேவை உள்ளிட்ட வசதிகளுடன் வாழ முடியும்.நீதிபதியாக இருந்த சதாசிவம், பா.ஜ., அரசால், கேரள கவர்னராக நியமனம் செய்யப்பட்டார்.
உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோேகாய், ஓய்வு பெற்ற பின், ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஆறுமுகசாமி, ஓய்வு பெற்ற பின், முன்னாள் முதல்வர் ஜெ., எப்படி இறந்தார் என்ற விசாரணை கமிஷன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.அவ்வழியில், எம்.ஆர்.ஷாவுக்கும் ஏதாவது பதவி கிடைக்கலாம்.இந்த போக்கு, நல்லதல்ல
புடிச்சு ஜெயில்ல போடுங்க!
பா.விஜய், மெக்லீன், அமெரிக்காவிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
ஜனவரியில், வேலுார் சத்துவாச்சாரி நிலைய போலீசாரும், ஏ.எஸ்.பி., தலைமையில் இயங்கும் தனிப்பிரிவு போலீசாரும், இரவு நேர ரோந்து சென்றனர். அப்போது, ஆட்டோவில் வந்த மூன்று பேரை மடக்கியபோது, அவர்கள் அண்டா, குண்டா உள்ளிட்ட பொருட்களைத் திருடி வந்தது, தெரிய வந்திருக்கிறது.உடனடியாக அவர்களை, சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் புனிதாவிடம், மேல் நடவடிக்கைக்காக ஒப்படைத்து உள்ளனர்.
சில நாட்களுக்கு முன், அதே திருட்டு கும்பலை, போலீசார் மடக்கி விசாரித்த போது, வழக்கறிஞர் ஒருவரின் முன்னிலையில், 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர், அவர்களை விடுவித்த செய்தி தெரிய வந்திருக்கிறது.உடனே இச்செய்தி, உயர் அலுவலர்கள் கவனத்திற்கு சென்றுள்ளது. அவர்களும், புனிதாவை, வேலுார் ஆயுதப்பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்துள்ளனராம்.
இதே கால கட்டத்தில் கேரளாவில், காசர்கோட்டிலிருந்து திருவனந்தபுரம் வரை, 'ஐஸ்வர்ய யாத்திரை' மேற்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலாவுக்கு, எர்ணாகுளம் விருந்தினர் மாளிகையில், கல்லார்க்காட்டைச் சேர்ந்த போலீசார், ஆறு பேர் சால்வை அணிவித்த காரணத்திற்காக, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக காவல் துறையில் நடக்கும் அவலத்தை வெளிச்சம் போட்டுக்காட்ட, வேறென்ன வேண்டும்?இருபது ஆயிரம் ரூபாய்க்காக திருடர்களை விடுவித்த இன்ஸ்பெக்டரை பணியிலிருந்து நீக்கி, வேலுாரிலேயே உள்ள ஜெயிலுக்கு அனுப்பியிருந்தால், மற்றவர்கள் தவறு செய்ய அஞ்சுவர்.அதிலும் அவர் செய்த தவறு, மன்னிக்கக்கூடியது அல்லவே... வேலியே பயிரை மேய்வது போல், திருடர்களை பிடித்துத் தண்டிக்க வேண்டியவரே, அவர்களை விடுவித்து, மேலும் திருடத் துாண்டியதாகத் தானே அர்த்தம்!
லஞ்சம் கொடுத்தால், போலீசாரிடம் இருந்து தப்பி விடலாம் என்ற நம்பிக்கையில், எத்தனை இடங்களில் அவர்கள் கைவரிசையைக் காட்டினரோ? இச்செய்தி அறிந்து, எத்தனை பேர், குற்றச் செயல்களில் துணிந்து களமிறங்கினரோ?இது போன்ற போலீசாரை தண்டிக்காமல் இருப்பது, மற்ற அதிகாரிகளையும், தவறு செய்ய துாண்டும்.எவ்வகையில் பார்த்தாலும் இச்செயல், இந்தநாட்டின் நலனுக்கு எதிரானது. எனவே, யாராக இருந்தால் என்ன... குற்றவாளி என்றால், சிறையில் தள்ளுங்கள்
அவர் சொன்னது சரி தானே!
மரகதவல்லி, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில், பா.ஜ.,வுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்யும், ஒரே முஸ்லிம் தலைவர், தமிழ்நாடு ஏகத்துவ ஜமாஅத் என்ற அமைப்பின் நிறுவனர் இப்ராஹிம் தான். அவருக்கும் எவ்வளவு இடைஞ்சல் வருகிறது.
'முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி, பா.ஜ., என, எதிர்க்கட்சிகளால் திட்டமிட்ட பொய் பிரசாரம் நடத்தப்படுகிறது. 'கொரோனா' தடுப்பு மருந்தை, வங்க தேசம், மாலத்தீவு, ஆப்கானிஸ்தான், அரபு நாடுகள் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளுக்கு, மோடி அரசு அனுப்பி வருகிறது. முஸ்லிம் விரோத அரசு என்றால் இப்படி செய்யுமா?' என, கேள்வி எழுப்பியிருக்கிறார்.
மோடி அரசு, இதுவரை சிறுபான்மையினருக்கு எதிராக என்ன செய்து இருக்கிறது? ஒன்றுமே இல்லை. அப்படியிருந்தும் ஏன், அக்கட்சி மீது பொய் குற்றச்சாட்டு பரப்பப்படுகிறது.மத்தியில் ஆட்சி பொறுப்பேற்ற பின், பா.ஜ., முக்கியமாக மூன்று விஷயங்களை செய்திருக்கிறது. முதலாவது, குடியுரிமை திருத்த சட்டம், இந்தியாவில் வாழும் ஒரு முஸ்லிமைக் கூட பாதிக்காது.இரண்டாவது, 'முத்தலாக்' தடை சட்டம். உலகிலுள்ள, 36 முஸ்லிம் நாடுகளே, முத்தலாக் சட்டத்தை தடை செய்துள்ளன. இந்தியாவும், அவ்வழியை பின்பற்றியுள்ளது.
மூன்றாவதாக, காஷ்மீருக்கு கொடுக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியது. அதற்கு பின், காஷ்மீர் முழுமையாக இந்தியாவுடன் இணைந்தது.இதில் எதுவுமே, முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கை இல்லை. ஹிந்து மதத்திற்கும் பாதிப்பு ஏற்படும்போது, வேறு எந்த கட்சியும் முன் வந்து, அதை தடுக்க வருவதில்லை; பா.ஜ., வருகிறது. அதனால் எதிர்க்கட்சிகளுக்கு கோபம் வருகிறது.இப்ராஹிம் கருத்து ஏற்புடையதே. அடிப்படை மதவாதிகளிடம் இருந்து அவரை பாதுகாக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE