தே.மு.தி.க., மாநில துணை செயலர் சுதீஷ்: தே.மு.தி.க., எக்கட்சியுடன் கூட்டணி வைக்கிறதோ, அக்கட்சியே வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும். அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., தான் பெரிய கட்சியாக உள்ளது. தமிழகத்தில், தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு அடுத்த மூன்றாவது கட்சியாக, தே.மு.தி.க., உள்ளது.
'டவுட்' தனபாலு: இது, ஐந்தாண்டுகளுக்கு முன் நடந்த தேர்தலில் பெற்ற ஓட்டுகளின் அடிப்படையிலான புள்ளிவிபரம் அப்போது இருந்த நிலை வேறு; இப்போதுள்ள நிலை வேறு. இப்போது உங்கள் தலைவர் கேப்டன் விஜயகாந்த் செயல்படாத தலைவராக உள்ளார். அவரை நம்பி அரசியலில் களம் இறங்க, கட்சித் தலைவர்கள் தயாரில்லை. எனவே, மூன்றாவது பெரிய கட்சி என்பதெல்லாம் இனிமேல் எடுபடாது என்பது தான், தமிழக மக்களின் 'டவுட்'டே இல்லாத கருத்து!
தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின்: எல்லாருக்கும் பொருந்தக் கூடியதால், திருக்குறளை உலகப் பொதுமறையாகவும், வள்ளுவரை, அடையாளங்களுக்கு அப்பாற்பட்ட வராகவும், தமிழ் சமூகம் கொண்டாடி வருகிறது. ஆனால், அவருக்கு காவி உடை அணிவித்த கும்பல், இப்போது, சி.பி.எஸ்.இ., பாடப் புத்தகத்தில், குடுமி போட்டு ரசிப்பது, எல்லை மீறும் செயல்.
'டவுட்' தனபாலு: இப்போது நீங்கள் விதவிதமான கிராப் வைத்துள்ளீர்கள். அந்த காலத்தில், 500 ஆண்டுகளுக்கு முன் துவங்கி, 2,000 ஆண்டுகள் முன் வரை, மக்கள் கிராப் வைத்திருக்கவில்லை. குடுமி மற்றும் தலையில் நிறைய முடி தான் வைத்திருந்தனர். உங்க தாத்தாவுக்கு அப்பா கூட பாரம்பரிய முறையில் தான் இருந்தார். அந்த வரலாறு தெரிந்திருந்தும், சங் பரிவாரை எப்படியாவது சாட வேண்டும் என்பதற்காக இவ்வாறு கூறுகிறீர்களோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது!
பத்திரிகை செய்தி: தமிழகத்தில், 2016 சட்டசபை தேர்தலில், மக்கள் நலக் கூட்டணி உருவானது போல், வரும் தேர்தலிலும், அ.ம.மு.க., - ம.நீ.ம., - வி.சி., கட்சிகள் இணைந்து, மூன்றாவது அணி அமைக்கும் முயற்சி, திரைமறைவில் நடக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
'டவுட்' தனபாலு: இந்த அரசியல் சூழ்நிலையில், மக்கள் நல கூட்டணி என்ற ஏதாவது ஒரு பெயரில் மூன்றாவது அணி அமைந்தால் போணியாகாது. குறிப்பாக, மக்கள் ஓட்டு போட மாட்டார்கள் என்பதை, முந்தைய தேர்தல்கள் நன்கு உணர்த்தியுள்ளன. எனவே, மூன்றாவது அணி அமையாது என்பதில், யாருக்கும், 'டவுட்'டே வராது. ஏனெனில், அது போணியாகாது!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE