''பணம் குடுத்தா தான் பதவின்னு ஆயிட்டு வே...'' என, அரட்டை கச்சேரியை ஆரம்பித்தார், அண்ணாச்சி.
''எந்த துறையிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''நான் சொல்றது, அரசியல் கட்சியை... திருவள்ளூர், திருத்தணி தொகுதி, தி.மு.க.,வுல பதவிகள் வேணும்னா, லட்சங்கள்ல காணிக்கை கட்டணுமாம்...
''சமீபத்துல, ஒன்றிய அளவுல பதவிக்கு வந்த ஒருத்தர், 25 லட்சம் ரூபாய் குடுத்து தான், அந்தப் பதவியை பிடிச்சிருக்காரு வே...
''இவ்வளவுக்கும் அவர், கட்சி பணிகள்ல, அவ்வளவா ஈடுபாடு காட்டாதவர்... தன் தொழில்ல தான் ஆர்வமா இருந்திருக்காரு வே...
''இந்த இரண்டு தொகுதிகள்லயும், ஸ்டாலின் உறவினரின் நண்பரது ஆதிக்கம் அதிகமா இருக்கு... ''இதனால, கட்சிக்காக கஷ்டப்பட்டு உழைச்சவங்க, மனம் வெதும்பி போயிருக்காவ வே...'' என்ற அண்ணாச்சி,
''சபரீசன் நண்பர் வெங்கடேசன் வந்தாருன்னா, எனக்கு போன் பண்ண சொல்லுங்க.. எனக்கு அவசர ஜோலியிருக்கு வே... கிளம்புதேன்...'' என்றபடியே விடை பெற்றார்.
''என்கிட்டயும், தி.மு.க., தகவல் ஒண்ணு இருக்குதுங்க...'' என, அடுத்த தகவலுக்கு தடம் மாறினார், அந்தோணிசாமி.
''சீக்கிரமா எடுத்து விடும் ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றிய, தி.மு.க., செயலரா இருக்கிறவங்க வெண்ணிலா சேகர்... இவங்க கணவர் சேகர், 'மாஜி' அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் உதவியாளரா இருந்ததால, தன் மனைவிக்கு இந்த பதவியை வாங்கி குடுத்தாருங்க...
''போன, 2006ல இருந்து, இப்ப வரைக்கும், 15 வருஷமா ஒன்றியச் செயலர் பதவியில, வெண்ணிலா தான் இருக்காங்க... தி.மு.க.,வுல இருக்கிற, 400க்கும் மேற்பட்ட ஒன்றியச் செயலர்கள்ல, இவங்க ஒருத்தர் தான் பெண்...
''வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன்கள் ராஜா, பிரபு ரெண்டு பேரும், வீரபாண்டி தொகுதிக்கு குறி வச்சிருக்காங்க... ''அதே நேரம், பெண் ஒன்றியச் செயலரான தனக்கு இந்த தொகுதியை தரணும்னு, வெண்ணிலாவும், தலைமையிடம் கேட்டுட்டு இருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''தேர்தல் நெருங்குற சமயத்துல, ஆட்கள் பற்றாக்குறையால தவிக்கிறாங்க பா...'' என, கடைசி மேட்டருக்கு வந்தார், அன்வர்பாய்.
''எந்த துறையில ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''தமிழக உளவுப் பிரிவான, எஸ்.பி.சி.ஐ.டி.,யில, ஆட்கள் பற்றாக்குறை நிறைய இருக்குது... முக்கியமான கட்சிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க கூட, ஆட்கள் இல்லையாம் பா...
''இதனால, சமூக வலைதளங்கள்ல பரவுற தகவல்களை உறுதி செய்து, தலைமைக்கு தகவல் அனுப்புறாங்க... அதுவும் இல்லாம, இந்த பிரிவு போலீசாருக்கு, ஊக்கத்தொகை, சிறந்த பணிக்கான விருதுகள் தந்து, ரொம்ப நாளாகிடுச்சு பா...
''தேர்தல் சமயத்துல, இவங்களது பணி ரொம்பவும் முக்கியம்... 'அதனால, எத்தனையோ சலுகைகளை அறிவிச்சிட்டு இருக்கிற அரசாங்கம், எங்க குறைகளையும் கவனிக்கணும்'னு, உளவுப் பிரிவு போலீசார் சொல்றாங்க பா...'' என, முடித்தார் அன்வர்பாய்.பேச்சு முடிவுக்கு வர, பெரியவர்கள் கிளம்பினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE