'மற்ற மதங்களில் அறநிலையத் துறை என உண்டா; அரசு தலையிடத் தான் முடியுமா...' என, கிடுக்கிப்பிடி போடத் தோன்றும் வகையில், தமிழக கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் மணியன் பேச்சு:
ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், விலை மதிக்க முடியாத சொத்துக்கள் நிறையஉள்ளன. இதன் கட்டுப்பாட்டில் கோவில்கள் மட்டுமின்றி பள்ளிகள், கல்லுாரிகளும் உள்ளன. ஆனால், வருவாய் தான் கேள்விக்குறியாக உள்ளது.
'பசித்தால் கள் அருந்த முடியாது; சோறு தான் சாப்பிட முடியும். கள் குடித்தால் போதை வரும்; சாப்பிட்டால் போதை வராது...' என, பதிலடி கொடுக்கத் தோன்றும் வகையில், கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேட்டி:
கள் இறக்குவது, பருகுவது அரசியல் அமைப்பு சட்டம் மக்களுக்கு கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமை. தமிழகத்தை தவிர வேறு எங்கும் கள் இறக்கவும், பருகவும் தடை இல்லை. கேரளாவில் மதுக் கடைகள் அடைக்கப்பட்டாலும், கள்ளுக்கடைகள் மூடப்படவில்லை. கள் என்பது மது, போதைப் பொருள் இல்லை.'இதெல்லாம் சாதனையா...
புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு நல்ல படியாக வாழ கற்றுக் கொடுங்கள்; அரசியல் கூட்டங்களுக்கு ஆள் சேர்க்காதீர்கள்...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் வீரமணி பேச்சு:
தமிழகத்தில், நீர்ப்பிடிப்பு பகுதிகளை தவிர, அரசு புறம்போக்கு நிலங்களில், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு, அரசு, இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கி வருகிறது. 'பெயரை மாற்றுவதால் பயனில்லை; பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வியறிவு, போட்டித் தேர்வுகளை சந்திக்கும் திறன்களை முதலில் வழங்குங்கள்...' என, நெத்தியடியாக கூறத் தோன்றும் வகையில், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஒன்றிய மாநில தலைவர் சண்முகராஜன் பேட்டி:
பிற்படுத்தப்பட்டோர் அரசு விடுதி காப்பாளர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கு இணையான தகுதி உடையவர்கள். எனவே, 'காப்பாளர்' பெயரை, 'விடுதி நல அலுவலர்' என, தமிழக அரசு மாற்ற வேண்டும்.'அப்போ, அவர்கள் முழு நேரமும் விவசாயம் மட்டுமே செய்ய வேண்டி வரும்; விவசாயத்தையும், அதன் பாரம்பரியத்தையும் காக்க வேண்டி வரும்; செய்வரா...' என, கேட்கத் தோன்றும் வகையில், தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலர் சுவாமிமலை சுந்தர விமலநாதன் அறிக்கை: 55 வயதை கடந்த பெண் விவசாயிகள் மற்றும், 58 வயதை கடந்த ஆண் விவசாயிகளுக்கு மாதம், 3,000 ரூபாய் ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும்.
'புது விளக்கமாக இருக்கிறதே; இப்படித் தான், தி.மு.க., ஆட்சி காலத்தில் நடந்ததா... என, கேட்கத் தோன்றும் வகையில், தி.மு.க., முதன்மை செயலர் நேரு பேட்டி:
கடந்த 10 ஆண்டுகளாக, அ.தி.மு.க.,வினர் தான் கூட்டுறவு சங்கங்களில் அதிகாரத்தில் இருந்துள்ளனர். அதிகாரத்தில் இருந்தவர்கள், சங்கத்தில் உள்ளவர்களுக்கு தெரியாமலேயே, அவர்கள் பெயரில் கடன் வாங்கி உள்ளனர். அதைத் தான், விவசாயக் கடன் என்ற பெயரில் முதல்வர் தள்ளுபடி செய்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE