மேட்டுப்பாளையம்:காரமடை அரங்கநாதர் கோவிலில், நேற்று மாசிமக தேர் திருவிழா துவங்கியது.கோவை மாவட்டம், காரமடை அரங்கநாதர் கோவிலில் இந்த ஆண்டு, மாசிமக தேர் திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அதிகாலை, 5:00 மணிக்கு, மூலவருக்கு திருமஞ்சனமும், விஷ்வக்சேனர் ஆராதனையும், வாசுதேவ புண்ணியாக வாசனமும் செய்யப்பட்டது.கோவில் வளாகத்தில் உள்ள, பிரம்ம தீர்த்த கிணற்றில் இருந்து, தீர்த்தக் குடங்களை யாகசாலைக்கு எடுத்து வந்தனர். பின், தேருக்கு முகூர்த்தக்கால் பூஜை செய்தனர். ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாளுக்கு, சிறப்பு பூஜை செய்து, உற்சவர் முன் ஸ்ரீமுகம் வாசிக்கப்பட்டது.பின்பு சுவாமிக்கும், அர்ச்சகர்களுக்கும் கங்கணம் கட்டப்பட்டது. கோவில் கொடிமரம் அருகே கருடாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனமும், வேத கோஷங்களும் சேவிக்கப்பட்டது.சிறப்பு பூஜைக்கு பின், காலை, 11:15 மணிக்கு, கொடிமரத்தில் கருடாழ்வார் உருவம் போட்ட கொடி ஏற்றப்பட்டது. அப்போது கோவிலின் மேல் பகுதியில், வானத்தில் கருடன் வலம் வந்தது. இதை பார்த்த பக்தர்கள், 'கோவிந்தா கோவிந்தா' என கோஷமிட்டனர்.வரும், 25ம் தேதி பெட்டத்தம்மன் அழைப்பும், 26ம் தேதி அதிகாலை, 5:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடக்க உள்ளது. 27ம் தேதி அதிகாலை, 5:30 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவி, சமேதராக அரங்கநாத பெருமாள் தேருக்கு எழுந்தருள்கிறார். மாலை, 4:00 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE