புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து, முன்னாள் கவர்னர் கிரண்பேடி விடைபெற்றார். அவரை, அதிகாரிகள் வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தனர்.
புதுச்சேரி கவர்னராக இருந்த கிரண்பேடி, கடந்த, 16ம் தேதி பதவி நீக்கப்பட்டு, தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, ராஜ்நிவாசில் தங்கிய கிரண்பேடி, நேற்று முன்தினம், மணக்குள விநாயகர் கோவிலில் தரிசனம் செய்தார்.நேற்று காலை, 9:10 மணிக்கு ராஜ்நிவாசில் இருந்து புறப்பட்டார். ராஜ்நிவாஸ் அதிகாரிகள், பணியாளர்கள் வாசல் வரை வந்து வழியனுப்பினர். 'பல்வேறு விஷயங்களை தங்களிடம் கற்றுக் கொண்டோம். உங்களுடன் பணியாற்றிய அனுபவம், பொன்னான வாய்ப்பு' என, அதிகாரிகள் உருக்கமாக தெரிவித்தனர். அனைவருக்கும் கிரண்பேடி நன்றி தெரிவித்தார்.புதுச்சேரியில் இருந்து காரில் புறப்பட்ட கிரண்பேடி, கோவை சென்று, ஈஷா மையத்தில் சத்குருவை சந்திக்க உள்ளார். அங்கிருந்து, டில்லி செல்ல திட்டமிட்டுள்ளார்.கிரண்பேடி, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'ராஜ்நிவாசில் மூன்று நாட்கள் தங்க அனுமதி அளித்த தமிழிசைக்கு நன்றி. டில்லியில் லோதி கார்டன், நேரு பூங்காவில் உள்ள மரக்கிளைகளை பார்க்க போகிறேன். இனி, புதுச்சேரிக்கு சுற்றுலா பயணியாக வந்து, கடற்கரையில் நடந்து செல்வேன். நண்பர்களை சந்திப்பேன்' என தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE