பல்லடம்:பல்லடம் அருகே, 20 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலத்துக்கு, பட்டா பெற நடந்த முயற்சியை, பக்தர்கள் முறியடித்தனர்.திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே, காளிவேலம்பட்டியில், 400 ஆண்டு பழமையான ஹரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.தற்போது, சிதிலமடைந்த நிலையில் உள்ளது.
கோவிலுக்கு சொந்தமாக, காளிவேலம்பட்டியில் 3.5 ஏக்கர், சுக்கம்பாளையத்தில் 6.5 ஏக்கர் நிலம் உள்ளது.பக்தர்கள் கூறியதாவது:முதன்மை ஆவணத்தில், 'கோவில் நிலம்' என்பதற்கான சான்று உள்ளது. இனாமாக வழங்கப்பட்ட கோவில் நிலத்தை சிலர் முறைகேடாக பெற்று, சிட்டாவில் பெயரை இணைத்து, பட்டா பெற முயற்சிக்கின்றனர். நிலத்துக்கு வேலி அமைத்ததுடன், மின் இணைப்பும் பெற்றுள்ளனர். இதுகுறித்து அனைத்து அரசு துறைகளுக்கும் புகார் அளித்தோம்.இதையடுத்து, பட்டா மாறுதல் செய்யக்கூடாது என வருவாய் துறைக்கு, இந்து அறநிலைய துறை உதவி ஆணையர் வெங்கடேஷ், அறிவுறுத்தியுள்ளார்.
தற்போது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கோவில் நிலம், 20 கோடி ரூபாய் மதிப்புடையது. அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே கோவில் நிலத்தை முழுமையாக மீட்டெடுக்க முடியும். முதல்வர் தனிப்பிரிவுக்கும் புகார் அளித்துள்ளோம்.இவ்வாறு, பக்தர்கள் கூறினர்.அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கோவில் பெயரில் உள்ள இனாம் நிலங்கள் குறித்த விபரங்களை வருவாய் துறை அதிகாரிகள் வழங்காமல் இழுத்தடித்து வருவதால் முழு விபரங்களை சேகரிக்க முடியாமலும், நிலங்களை மீட்பதிலும் சிக்கல் நீடித்து வருகிறது' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE