புதுச்சேரி: புதுச்சேரியில், வழக்கத்திற்கு மாறாக, பிப்ரவரி மாதத்தில் ஒரே நாளில், 19 செ.மீ., மழை கொட்டி தீர்த்தது. பல இடங்கள் வெள்ளக்காடாக மாறியது.புதுச்சேரி அரசியல் அரங்கில், அனல் பறக்கும் காட்சிகள் அடுத்தடுத்து, அரங்கேறி வருகின்றன.
இந்த சூட்டை தணிக்கும் விதமாகவோ என்னவோ, நேற்று அதிகாலை, 2:00 மணி முதல் காலை, 9:00 மணி வரை ஏழு மணி நேரம் இடைவிடாது கனமழை பெய்தது. காலை, 8:30 மணி நிலவரப்படி, புதுச்சேரியில், 19 செ.மீ., மழை பதிவானது.நகரின் பல பகுதிகள் வெள்ளக் காடானது. புதுச்சேரியில், 2,000 பிப்ரவரி, 27ல் பெய்த, 11.7 செ.மீ., மழை அளவை மிஞ்சியது.சாலைகளில், 4 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியதால், கார்கள், பைக்குகள் மூழ்கின. தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்தது. சாலையில் தண்ணீர் தேங்கியதால், பஸ் போக்குவரத்து, ஆட்டோ, டாக்சிகள் நிறுத்தப்பட்டன.வெளியூர்களில் இருந்து வந்த பயணியர், பஸ் நிலையத்தில் தவித்தனர். மதியம், 2:00 மணிக்கு பிறகே, பஸ் போக்குவரத்து சீரானது.பள்ளிக்கு விடுமுறைகனமழை காரணமாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 1 முதல், 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு, இன்று, 22ம் தேதி அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு நேற்று நடக்க இருந்த இறுதிக்கட்ட கலந்தாய்வு வரும், 24ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.நீலகிரி நீலகிரி மாவட்டம், குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், இரண்டு நாட்களாக இரவில் கனமழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை பெய்த கனமழையில், குன்னுார் மரப்பாலம் அருகே சாலையில் இரண்டு காட்டு மரங்களும், குன்னுார் கோத்தகிரி சாலையில், வட்டப்பாறை அருகே ஒரு மரமும் விழுந்தன.தீயணைப்புத் துறையினர் மரங்களை வெட்டி அகற்றினர். குன்னுார் - மேட்டுப்பாளையம் சாலையில் இரண்டரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.மழை தொடரும்வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்ட சுழற்சி மற்றும் கிழக்கு திசை காற்றில் ஏற்பட்ட சுழற்சியால், மூன்று நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், திடீர் மழை பெய்து வருகிறது. இதை, சென்னை வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே கணித்திருந்தது.
மேலும், 'இந்த மழை தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் தொடரும். நாளை மறுநாள் முதல், இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE