சென்னை:''இளைஞர்களின் வேண்டுகோளை ஏற்று, அரசியல் களம் காண்போம் என்ற இலக்கை நோக்கி பயணிக்க முடிவு செய்துள்ளேன்,'' என, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம்
பேசினார்.
விருப்ப ஓய்வு பெற்றவர், ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம். இவர், அரசு பணியில் இருந்தபோது, தன் அலுவலகங்களில், 'லஞ்சம் தவிர்த்து; நெஞ்சம் நிமிர்த்து' என எழுதி வைத்ததுடன், நேர்மையாக பணியாற்றி, அனைவரது பாராட்டையும் பெற்றார்.இவர், தன் அரசியல்
நிலைப்பாட்டை, சென்னை, ஆதம்பாக்கத்தில், அவரது ஆதரவாளர்கள் நடத்திய பொதுக்கூட்டம் வாயிலாக வெளிப்படுத்தினார்.
சகாயம் பேசியதாவது:என் 28 ஆண்டு கால அரசு பணியில், பல்வேறு சவால்கள், இன்னல்களை சந்தித்துள்ளேன். நேர்மையான அதிகாரிகளை, பல்வேறு கட்டங்களில் அவமானப்படுத்தும்
அரசியல்வாதிகள் அதிகம்.என் விருப்ப ஓய்வை கூட, சர்ச்சையாக்கி தான்அனுப்பினர்.நான், எந்த நடிகருக்கும் ஆதரவாக குரல் கொடுக்கவும் இல்லை. அவர்களை, சந்தித்ததும் கிடையாது. ஊழலை ஒழிக்க அரசியலுக்கு வாருங்கள் என, இளைஞர்கள் அழைத்து கொண்டே
இருக்கின்றனர்.
அவர்களின், வேண்டுகோளை பரிசீலித்து, 'அரசியல் களம் காண்போம்' என்ற இலக்கை நோக்கி பயணிக்க முடிவு செய்துள்ளேன்.ஊழலற்ற நிர்வாகம் செய்வதே குறிக்கோளாக இருக்கும். இதை, தாய்மொழி தினத்தன்று, கூறுவதில் பெருமை கொள்கிறேன். ஆனால், இளைஞர்களுக்கு நான் வைக்கும் கோரிக்கை ஒன்று தான். காமராஜர், கக்கன் போல் நேர்மையாக, அண்ணாதுரை போல் எளிமையாக இருக்க வேண்டும்.
எந்த ஒரு சூழலிலும், ஊழல் செய்பவராகவோ, உறுதுணையாகவோ இருக்கக்கூடாது. ஜாதி, மதங்களை கடந்து செயலாற்ற வேண்டும். புதியதொரு தமிழகம் உருவாக்குவோம்.
அரசியலுக்கான, ஆயத்த பணிகள்அதிகம் உள்ளன. அதை, இணைந்து செய்வோம்.இவ்வாறு, சகாயம் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE