சென்னை: பிரதமரின் விவசாய உதவித்தொகை திட்ட முறைகேடு தொடர்பாக, இதுவரை, 162 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, வேளாண்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:பிரதமரின் விவசாய உதவித்தொகை திட்டம், 2018 டிச.,1 முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை, 2,000 ரூபாய் வீதம், ஆண்டுக்கு, 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது. விவசாயிகளின் வங்கி கணக்கில், நேரடியாக உதவித்தொகை செலுத்தப்படுகிறது.கொரோனா பரவல் அதிகரித்திருந்த நிலையில், 2020 ஏப்ரல் முதல் ஜூலை வரை, இத்திட்டத்தில் பயனாளிகள் சேர்க்கை கணிசமாக அதிகரித்தது. தரகர்கள் மற்றும் பொதுசேவை மையங்களில் உள்ளவர்கள், பொதுமக்களிடம் ஆதார் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை சேகரித்துள்ளனர்.கொரோனா நிவாரண நிதி வழங்குவதாக கூறி, பிரதமரின் விவசாய உதவித்தொகை திட்டத்தில் தகுதியவற்றவர்களை சேர்த்துள்ளனர். வேளாண்துறை ஆய்வில், இத்தகவல் கண்டறியப்பட்டது.இவ்வாறு, 6.09 லட்சம் தகுதியற்ற பயனாளிகள் கண்டறியப்பட்டு, அவர்களிடம் இருந்து, 200 கோடி ரூபாய் பறிமுதல் செய்ய திட்டமிடப்பட்டது. இதுவரை, 5.10 லட்சம் தகுதியற்ற பயனாளிகளிடம் இருந்து, 162 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.இந்த நிதி, பிரதமரின் உதவித்தொகை திட்ட வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. தகுதியற்ற பயனாளிகளின் வங்கி கணக்குகளில் உள்ள, அரசுக்கு சேர வேண்டிய பணத்தை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.இதற்கென, மாவட்டம் தோறும் பிரதமரின் உதவித்தொகை திட்ட வங்கி கணக்கு தொடங்கப்பட்டு, மீட்கப்பட்ட பணம் செலுத்தப்பட்டு வருகிறது.சிலரின் வங்கி கணக்குகளில், தவறுதலாக வரவு வைக்கப்பட்ட உதவித் தொகையை, அவர்கள் எடுத்து இருந்தால், அந்த தொகையை மீண்டும் வங்கிக் கணக்கில் செலுத்துமாறு, வருவாய் துறை வாயிலாக அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE