கரூர்: ''ஸ்டாலின் வைத்துள்ள மனுக்கள் பெட்டிக்குள் இன்னொரு பெட்டி இருக்கிறது. அதில், பொதுமக்கள் கோரிக்கை போட ஒரு பெட்டியும், யார், யாருக்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்ற விபரம், இன்னொரு பெட்டியிலும் இருக்கிறது,'' என, முதல்வர் இ.பி.எஸ்., பேசினார்.
கரூர் லைட் ஹவுஸ் கார்னரில், மகாத்மா காந்தி, அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா சிலை திறப்பு விழா நேற்று நடந்தது. சிலைகளை திறந்து, முதல்வர் இ.பி.எஸ்., பேசியதாவது:கரூர், அ.தி.மு.க.,வின் கோட்டை என்பதால், அடிக்கடி எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்து வருகின்றனர். பச்சோந்தி கூட, சிறிது நேரம் கழிச்சு தான் கலர் மாறும். அதைவிட வேகமாக, செந்தில் பாலாஜி, கட்சிகள் மாறி வருகிறார்.ஐந்தாண்டு காலத்திற்குள், இரண்டு சின்னத்தில் போட்டியிட்டு சாதனை செய்துள்ளார்.
இப்போ, தி.மு.க.,விற்கு போய், அங்கு இருப்பவர்களை முடித்து கட்டி, இவர் மாவட்ட பொறுப்பாளர் ஆகிவிட்டார்.அரவக்குறிச்சி தேர்தலில், 3 சென்ட் நிலம் உட்பட பொய்யான வாக்குறுதி கொடுத்து, வெற்றி பெற்றார். மக்களை எப்படி ஏமாற்ற வேண்டும் என்று, செந்தில் பாலாஜியிடம் கேட்க வேண்டும்.தி.மு.க., தலைவர் ஸ்டாலின், பொய் தவிர வேறு எதுவும் பேசுவது கிடையாது. நீங்கள் ஆட்சியில் இருக்கும் போது, எதையும் செய்வது கிடையாது. 2019 லோக்சபா தேர்தலுக்கு முன், ஊர் ஊராய் சென்று வாங்கிய மனுக்கள் என்னாச்சு?இப்பவும் பெட்ஷீட் விரித்து கொண்டு, மீண்டும் என்ன பிரச்னை என, கேட்க தொடங்கி விட்டார்.
அங்கு கூட, மனுக்கள் பெற பெட்டிக்குள்ளேயே, பெட்டி என்று இரண்டு பெட்டி இருக்கிறது. அதில், பொதுமக்கள் கோரிக்கை போட ஒரு பெட்டியும், யார், யாருக்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்ற விபரம், இன்னொரு பெட்டியில் இருக்கும். அதிலும் நம்பர் மாறி போய், முதல் நம்பர் கேள்விக்கு, எட்டாம் நம்பர் கேள்விக்குரிய பதிலை தப்பு, தப்பாக சொல்கிறார்.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், அ.தி.மு.க., அமைச்சர்கள் மீது புகார்களை விசாரிக்க, தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்று, ஸ்டாலின் சொல்கிறார். ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, எம்.எல்.ஏ.,- எம்.பி.,க்கள் வழக்கு விசாரணைக்கு, தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது கூட, அவருக்கு தெரியவில்லை. அதில், தி.மு.க.,வின், 13 முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு நடந்து வருகிறது.இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE