லக்னோ: அடுத்த ஆண்டு உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், கோவில்களுக்கு போவது, பண்டிகை தினங்களில் கங்கையில் குளிப்பது என, வாக்காளர்களை வசியப்படுத்த, ராகுலும், பிரியங்காவும் முடிவெடுத்துள்ளனர்.

தை அமாவாசை வட மாநிலங்களில், மிகவும் பய பக்தியுடன் கொண்டாடப்படும். அன்று, அலகாபாத் சங்கமத்தில் நீராடுவது என முடிவெடுத்தார் பிரியங்கா. போக்குவரத்து நெருக்கடி அதிகமாக இருக்கும் என்பதால், அங்கு, பிரியங்காவை எப்படி அழைத்துச் செல்வது என, கட்சித் தலைவர்கள் ஆலோசித்தனர். அலகாபாதில் ராணுவம் உள்ள, 'கன்டோன்மென்ட்' பகுதி வழியாக காரில் சென்று, அங்கிருந்து வசதியாக படகில் சங்கமத்துக்கு போகலாம்; போக்குவரத்து பிரச்னையும் இருக்காது;
ஆனால், இதற்கு ராணுவ அமைச்சகத்தின் அனுமதி தேவை.காங்., - எம்.பி., ஒருவர், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு போன் செய்து, விஷயத்தைச் சொல்லி, 'அனுமதி தர முடியுமா?' என, கேட்டார்.ராஜ்நாத்தும், உடனடியாக அனுமதி வழங்கிவிட்டார்; பின், எந்த பிரச்னையும் இல்லாமல் சங்கமத்தில் நீராடினார் பிரியங்கா. காங்கிரசார் உடனே இந்த புகைப்படங்களை மீடியாவில் கொடுத்து, 'காங்கிரஸ் ஹிந்துக்களுக்கு விரோதமான கட்சி இல்லை' என, செய்தி கொடுத்தனர்.

அன்று மாலை, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்த காங்கிரஸ் எம்.பி.,க்கு போன் செய்து, 'எல்லாம் நல்லபடியாக முடிந்ததா... பிரியங்காவிற்கு எந்த பிரச்னையும் இல்லையே' என, அன்பாக விசாரித்தாராம். 'உ.பி., காங்கிரசார், ராஜ்நாத் சிங் மீது, மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். இதேபோல மேற்கு வங்க முதல்வர் மம்தாவும், ராஜ்நாத் சிங் பற்றி விமர்சிப்பதே இல்லை' என்கின்றனர், பா.ஜ., நிர்வாகிகள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE