நாமக்கல்: ''தேர்தல் நேரத்தில், பொதுமக்களின் மனம் குளிர, மனம் மகிழ அற்புதமான அறிவிப்புகள் வெளிவரும்,'' என, தமிழக முதல்வர் பேசினார்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே, கபிலர் மலையில், முதல்வர் பழனிசாமி நேற்று இரவு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில், 52 லட்சம் மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும், 6,211 ஏரிகள் ரூ.1,117 கோடி மதிப்பில் தூர் வாரப்பட்டுள்ளன. பரமத்தி வேலூர் பகுதியில், ரூ. 406 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டப்படுகிறது. தி.மு.க., ஆட்சியில், கடுமை யான மின்வெட்டு இருந்தது. விவசாயம், தொழிற்சாலைகள் இதன்மூலம் பாதிக்கப்பட்டது. தற்போது தமிழகம் மின்மிகை மாநிலமாக உள்ளது. நீர்மேலாண்மை திட்டத்திற்காக, தமிழகம் தேசிய விருது பெற்றுள்ளது. உள்ளாட்சி துறையில், 143 விருதுகள் பெற்றுள்ளது. ஆனால், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அ.தி.மு.க., ஆட்சியில் ஒன்றுமே நடக்கவில்லை என்கிறார். ஜேடர்பாளையத்தில், ராஜவாய்க்கால் வெட்டிய அல்லாள இளையநாயக்கருக்கு, ரூ.30 லட்சம் மதிப்பில் மணி மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. ஒரு வாரத்தில் திறக்கப்படும்.கொரோனா காலம், கடந்த தைப்பொங்கல், இந்தாண்டு பொங்கல் என மக்களுக்கு ரூ.4,500 வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் நிறைய அறிவிப்புகள் வெளிவரும். பொதுமக்களின் மனம் குளிர, மனம் மகிழ அற்புதமான அறிவிப்புகள் வெளிவரும். இவ்வாறு அவர் பேசினார். அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, எம்.எல்.ஏக்கள் பாஸ்கர், சந்திரசேகர், பொன்.சரஸ்வதி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE