புதுச்சேரி: புதுச்சேரிக்கு கிடைக்க வேண்டிய நிதி கொடுக்காமல் மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்ததாக முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
புதுச்சேரியில் ஆளும் காங்., அரசு இன்று (பிப்.,22) பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பல்வேறு அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் காலையில் கூடிய சட்டசபையில் முதல்வர் நாராயணசாமி உரையாற்றியதாவது:
புதுச்சேரியின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை எனது அரசு நிறைவேற்றியது. விவசாயிகளின் கூட்டுறவு கடனை ரத்து செய்துள்ளோம். மாநில பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களை 95 சதவீதம் நிறைவேற்றி முடித்திருக்கிறோம். புதுச்சேரி அரசு மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். மத்திய அரசின் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 7 சதவீதம் தான். ஆனால் புதுச்சேரியின் பொருளாதார வளர்ச்சி 10.20 சதவீதமாக உள்ளது.

கடந்த என்.ஆர்.காங்கிரஸ் அரசு விட்டுச்சென்ற திட்டங்களையும் நிறைவேற்றினோம். கொரோனா காலத்தில் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும் மக்களுக்காக சேவையாற்றினர். எனது அரசு சிறப்பாக செயல்பட்டு கொரோனாவை கட்டுப்படுத்தியது. நானும் எனது சகாக்களும் அதிகாரத்துக்கு உட்பட்டே செயல்பட்டோம். மாநிலத்தில் தற்போது நடப்பது எதிர்க்கட்சிகளின் ஆட்சி கவிழ்ப்பு வேலை. மக்களால் புறக்கணிக்கப்பட்ட அனைவரும் இணைந்து ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மரியாதை வேண்டும்.

எவ்வளவு இன்னல்கள் கடந்தும் புதுச்சேரி மக்கள் நலனுக்காக எனது அரசு இரவு பகலாக பாடுபட்டுள்ளோம். மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தை தொடர்ந்து புறக்கணித்து வந்தது. புதுச்சேரிக்கு கிடைக்க வேண்டிய நிதியை மத்திய அரசு தரவில்லை. பல மாநிலங்களுக்கு 41 சதவீதம் வரி கொடுத்தார்கள். ஆனால் புதுச்சேரிக்கு 21 சதவீதம் தான் வரி கொடுத்தார்கள். சட்டமன்றம் உள்ள புதுச்சேரியையும், டில்லியையும் நிதி கமிஷனில் சேர்க்கப்படாமல் புறக்கணித்துள்ளது. இதன்மூலம் புதுச்சேரியை மத்திய அரசு வஞ்சித்துள்ளது உறுதியாகிவிட்டது.

துரோகம் இல்லையா?
இலவச அரிசி வழங்குவது உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் மத்திய அரசு தடுத்தது. இது துரோகம் இல்லையா? மத்திய அரசு மக்களுக்கு செய்யும் துரோகத்தை ஆதரித்தால் அது எதிர்க்கட்சிகளை பாதிக்கும். கருணாநிதி பெயரில் சிற்றுண்டி திட்டத்தை தொடங்கினேன். அதை மத்திய அரசு காப்பி அடித்தது. பார்லி.,யில் பெரும்பான்மை இருந்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாமா? பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையை உயர்த்தியது தான் மத்திய அரசின் சாதனை. சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை கொண்டு ரெய்டு நடத்தியதால் சிலர் ஓடிப்போனார்கள். இவ்வாறு அவர் உரையாற்றினார்.
ரங்கசாமி
என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி மக்களுக்காக நீங்கள் (காங்.,) கொடுத்த வாக்குறுதிகள் எத்தனை, அதில் எத்தனை நிறைவேற்றியுள்ளீர்கள்? புதிதாக எந்த திட்டங்களை கொண்டு வந்தீர்கள் என்பது தான் எனது கேள்வி. எனது ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட பாலங்கள் கட்டுவது உள்ளிட்ட திட்டங்களை நாராயணசாமி திறந்து வைத்துள்ளார். மக்களுக்காக எதுவும் செய்யாததால் எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்துள்ளனர். காங்கிரசின் மோசமான செயல்பாடுகள் வரக்கூடிய சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE