சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளில் தொண்டர்கள் அனைவரும் வீடுகளில் தீபம் ஏற்றி, இயக்கத்தை காப்பேன் என உறுதிமொழி ஏற்குமாறு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் (பிப்.,24) வருவதையொட்டி முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூட்டாக தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்: ஜெயலலிதாவின் ஆன்மா நம் ஒவ்வொருவரின் செயல்களையும் பார்த்துக்கொண்டு இருக்கிறது என்பது எங்கள் நம்பிக்கை. அதேபோல், தீங்கு செய்ய நினைப்போரை அறத்தின் வழி நின்று அழித்தும், ஒழித்தும் ஜெ., ஆன்மா இந்த இயக்கத்தை காத்துவருவதும் நம் நம்பிக்கை.
விலை கொடுத்தோ, வசைபாடியோ, வசியப்படுத்தியோ இந்த இயக்கத்தை வாங்க முடியாது. எதிரிகளும், துரோகிகளும் கைகோர்த்துக்கொண்டு நம் படையை வீழ்த்த வேண்டும் என்ற தீய எண்ணத்தோடு செயல்படத் தொடங்கியுள்ளனர். மக்கள் விரோதிகளுக்கு மீண்டும் ஒரு மாபெரும் பாடத்தை நாம் கற்பிக்க வேண்டும்.

ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்.,24ல் நீங்கள் (தொண்டர்கள்) ஒவ்வொருவரும் உங்கள் வீடுகளில் சரியாக மாலை 6 மணிக்கு தீபம் ஒன்றினை ஏற்றி, கண்களை மூடியவாறு பிரார்த்தனை செய்யுங்கள். மேலும், ‛உயிர்மூச்சுள்ளவரை ஜெ., வழியில் மக்களையும், மக்களுக்கான இந்த அதிமுக இயக்கத்தையும் காப்பேன். இது ஜெ., மீது ஆணை,' என்ற உறுதிமொழியை எங்களுடன் இணைந்து எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். நூற்றாண்டுகளுக்கும் அன்பை மட்டுமே வளர்த்து, கோட்டையில் நம் கொடியை உயர பறக்க செய்வோம். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE