புதுச்சேரி : புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.
புதுச்சேரியில் 2016 சட்டசபை தேர்தலில், காங்., 15 எம்.எல்.ஏ.,க்களுடன் ஆட்சி அமைத்தது. முதல்வராக நாராயணசாமி பதவியேற்றார். மூன்று தி.மு.க., - எம்.எல்.ஏ.க்கள், மாகி தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ., ஆட்சிக்கு ஆதரவளித்தனர். காங்., - எம்.எல்.ஏ., தனவேலு கடந்த ஆண்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டார். சமீபத்தில், அமைச்சர்கள் இருவர், இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால், காங்., ஆதரவு எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை 12 ஆக குறைந்தது. இன்று சட்டசபையில் நாராணயசாமி பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை. இதனால் காங்., அரசு பெரும்பான்மை இழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. துணைநிலை கவர்னரிடம் தனது அரசு மற்றும் அமைச்சர்கள் ராஜினாமா செய்வதாக கூறி கடிதத்தை கொடுத்தார். இதனால் புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது.

இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. ஆட்சிக் கவிழ்ப்பிற்கு காரணம் பா.ஜ. மட்டும் தான் முதல்வர் நாராணயசாமி குற்றம் சாட்டி வரும் நிலையில் டுவிட்டரில் கருத்து தெரிவிக்கும் பலரும் அதேயே கூறி வருகின்றனர். ''இங்கு ஜனநாயகத்திற்கு வேலை இல்லை, பணம் மட்டுமே சக்தி படைத்தது'', ''பா.ஜ.வின் சூழ்ச்சியால் மற்றுமொரு மாநிலத்தில் ஆட்சிக் கவிழ்ப்பு'', ''பா.ஜ.விடம் மற்றுமொரு மாநிலத்தை இழந்தது காங்கிரஸ்'', ''இப்படியே போனால் காங்கிரஸ் என்ற ஒரு கட்சியே இல்லாமல் போய்விடும் போல, கூடிய விரைவில் தேசிய அளவிலான எதிர்க்கட்சியாக ஆம் ஆத்மி கட்சி உருவெடுக்கும்''.
''புதுச்சேரிக்கு ராகுல் வந்து சென்ற 5 நாட்களில் காங்கிரஸ் ஆட்சியே கவிழ்ந்து போனது'', ''எல்லாம் ராகுலின் ராசி, இதேப்போன்று நாடு முழுக்க ஒவ்வொரு மாநிலமாக அவரை அனுப்பி வைக்க பா.ஜ., ஸ்பான்சர் செய்ய வேண்டும்'', ''இப்போது பா.ஜ.வினர் உற்சாகமாக இருப்பார்கள் குறிப்பாக மோடியும், அமித்ஷாவும்...'', ''ராஜஸ்தானை தொடர்ந்து புதுச்சேரியிலும் அரசியல் நெருக்கடி வருகிறது. ஏன் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்கள் நெருக்கடியை எதிர்கொள்கின்றன''. ''இதுபோன்று நடப்பதற்கு தேர்தல்கள் எதற்கு?, புதிய ஜனநாயக இந்தியாவில் மக்கள் தேர்வு செய்வது நகைச்சுவையாகிவிட்டது''.
இதுபோன்று பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதனால் டுவிட்டரில் புதுச்சேரி காங்கிரஸ் அரசு கவிழ்ப்பை வைத்து #PuducherryPoliticalCrisis, #Assembly, #MLAs, #Pondicherry, #Narayanasamy உள்ளிட்ட ஹேஷ்டாக்குகள் தேசிய அளவில் டிரெண்ட் ஆகின.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE