சென்னை: அதிமுக அரசின் சாதனைகளை ‛வெற்றி நடைபோடும் தமிழகம்' என்ற தலைப்பில் அரசு செலவில் விளம்பரம் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற வழக்கில் தேர்தல் ஆணையம், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். அதில், தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்குவதால், தமிழக அரசின் சார்பில், அதிமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டு, வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற தலைப்பில், பத்திரிகை, தொலைக்காட்சிகளில் விளம்பரம் வெளியிடப்படுகிறது. இந்த விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும். விளம்பரம் வெளியிடுவதற்கான தொகையை அதிமுக கட்சியிடம் வசூலிக்க உத்தரவிட வேண்டும்,' என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள், தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக வக்கீல் வில்சன் வாதிடுகையில், ‛மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டிய நிதியை, விளம்பரங்களுக்காக தவறாக பயன்படுத்தப்படுகிறது. முதல்வர் வேட்பாளர் மற்றும் ஆளுங்கட்சியை முன்னிலைப்படுத்தும் வகையில் வெளியிடப்படும் இதற்கு தடை விதிக்க வேண்டும்,' எனக்கூறினார். தேர்தல் ஆணையம் தரப்பு வக்கீல் ராஜகோபால், ‛இந்த விவகாரம் தொடர்பாக அதிமுகவிடம் விளக்கம் பெற்றுள்ளோம். அதை தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவதால், மனுவுக்கு விரிவாக பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும்' எனக் கோரினார்.
தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதிடுகையில், ‛விளம்பரங்களுக்கு ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ.64.72 கோடி செலவிடப்பட்டுள்ளது. அரசின் சாதனைகளை விளக்கி வெளியிடப்படும் இந்த விளம்பரங்கள் வழங்குவது, கடந்த 18-ம் தேதியுடன் நிறுத்தப்பட்டு விட்டது. தேர்தல் அறிவிப்பு வெளியிட்டு, நடத்தை விதிகள் அமலுக்கு வரவில்லை. இது சம்பந்தமாக விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும்' எனக் கோரினார். இதனையடுத்து, தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் மார்ச் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE