இ.பி.எஸ்., தமிழக முதல்வர்: நாங்கள், மத்திய அரசு சொல்வதைக் கேட்டு வருவதாக கூறுகின்றனர். நாங்கள் சொல்வதை தான் மத்திய அரசு கேட்கிறது என்பதற்கு, 'நடந்தாய் வாழி காவிரி' திட்ட அனுமதியே சாட்சி.
'டவுட்' தனபாலு: மாநில அரசு சொல்வதை, மத்திய அரசு கேட்க வேண்டும்; மத்திய அரசு சொல்வதை மாநில அரசு கேட்க வேண்டும். அப்படியொரு இணக்கம் இருந்தால் தான், எந்த மாநிலமும் முன்னேறும். டில்லியும், மேற்கு வங்கமும் போல இருந்தால், மாநிலம் குட்டிச்சுவராகத் தான் ஆகும். எனவே, இனிமேலும் யார் சொல்வதை யார் கேட்கின்றனர் என்ற விவகாரத்திற்கு முதல்வர் முக்கியத்துவம் கொடுப்பது வீண் என்பதில் யாருக்கும், 'டவுட்டே' இருக்காது!
துணை முதல்வர் பன்னீர்செல்வம்: ஜெயலலிதாவுக்கு பிறகு, இ.பி.எஸ்., சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். 100 ஆண்டுகளில் செய்ய வேண்டிய திட்டங்களை, 10 ஆண்டுகளில் செய்துள்ளோம். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், தினமும் அரசை வசை பாடிக் கொண்டு இருக்கிறார். மத்தியில், 15 ஆண்டு காலம் கூட்டணியில் இருந்தபோது, தி.மு.க., என்ன செய்தது?
'டவுட்' தனபாலு: இ.பி.எஸ்.,சின் நான்காண்டு கால ஆட்சியில், தமிழகம் பல துறைகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளது என்பதை நடுநிலையாளர்கள் ஒப்புக் கொள்கின்றனர். நீங்கள் இருவரும் ஒற்றுமையாக இருந்து எடுக்கும் முயற்சிகளால், கொரோனா கூட சற்று பதுங்கியது. ஆனால், இன்னமும், தி.மு.க., தலைமை பதுங்கவில்லையே; பதிலடி சரியில்லையோ என்ற, 'டவுட்' அ.தி.மு.க.,வினருக்கு வந்திருக்கிறது!
தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: ஆட்சி முடியப்போகும் நேரத்தில், முதல்வர் பழனிசாமி திட்டங்களை துவக்கி வைக்கிறார். 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளவர்கள், மக்களை ஏமாற்ற அறிவிப்புகளை வெளியிடுகின்றனர். சொல்லப்பட்ட எந்த திட்டங்களையும், அ.தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை.
'டவுட்' தனபாலு: முதல்வராக இருக்கும், இ.பி.எஸ்., பிரசார கூட்டங்களில் அறிவிக்கும் திட்டங்களை, அடுத்த சில நாட்களில் நிறைவேற்றி விடுகிறார். உதாரணம், விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி. ஆனால், நீங்கள் ஆட்சிக்கு வந்ததும் செய்வோம் என, தினமும் ஏராளமாக பட்டியலிடுகிறீர்கள்; அவை நிறைவேற்றப்படுமா என்பதே, தமிழக மக்களுக்கு, 'டவுட்' தான்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE