தி.மு.க.,வால் அழிக்க முடியாது!
ஆர்.கே.பன்னீர்செல்வம், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க.,வுக்கு எப்போதும் ஒரு ராசி உண்டு. அது, யாரை அழிக்க நினைக்கிறதோ, அவர்கள் அதி தீவிர வளர்ச்சி அடைவர். இது தான், கடந்த கால வரலாறு.கணக்கு கேட்டதற்காக, தி.மு.க.,வில் இருந்து, எம்.ஜி.ஆரை நீக்கினார், கருணாநிதி. உடனே, அ.தி.மு.க.,வைத் துவக்கினார் எம்.ஜி.ஆர். தி.மு.க., ஆட்சியின் அவலங்களை சித்தரித்து, எம்.ஜி.ஆர்., நேற்று இன்று நாளை என்ற படத்தில் நடித்தார். அந்த படத்தைப் பார்க்க கட்டுக் கடங்காத கூட்டம். திகைத்துப்போன, தி.மு.க.,வினர், திரையரங்குகளில் கூடிநின்ற எம்.ஜி.ஆர்., ரசிகர்கள் மீது, தீ வைத்து டயர், சோடா
பாட்டில்களை வீசி தாக்கினர்.சிதறி ஓடிய மக்களை, ஆங்காங்கே நின்ற, தி.மு.க., குண்டர்கள், சைக்கிள் செயினால் தாக்கினர்.தி.மு.க.,வினரின் கொலைவெறி தாக்குதலின் எதிர் விளைவாக, உப்பு சப்பு இல்லாத அந்த திரைப்படம், 100 நாட்களுக்கு மேல் ஓடி, வெற்றி விழா கண்டது.
சோடா பாட்டில், சைக்கிள் செயின் ஆகியவற்றின் மாற்று உபயோகத்தை கண்டுபிடித்த மாபெரும் விஞ்ஞானிகள், தி.மு.க.,வினர் தான்.
அடுத்து வந்த சட்டசபைத் தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்று, எம்.ஜி.ஆர்., அசுர பலத்துடன் ஆட்சி அமைத்தார். அவர் இருக்கும் வரை, தி.மு.க., எதிர்க்கட்சியாகத் தான் இருக்க முடிந்தது.எம்.ஜி.ஆர்., உடல் நலமில்லாமல் அமெரிக்காவில் இருந்தபோது, 'பல்டி' அடித்தார், கருணாநிதி.'எம்.ஜி.ஆர்., என் நீண்டநாள் நண்பர். ஆட்சியை என்னிடம் தாருங்கள். எம்.ஜி.ஆர்., வந்தவுடன் அவரிடம் கொடுத்து விடுகிறேன்' என வெட்கமில்லாமல், தேர்தலில் ஓட்டுக் கேட்டார்; ஆனால், அதை மக்கள் நம்பவில்லை.
எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின், அ.தி.மு.க.,விற்கு, ஜெயலலிதா தலைமை பொறுப்பு ஏற்றார். சட்டசபையில் அவரது சேலையை இழுத்து, அநாகரிகமாக செயல்பட்டனர், தி.மு.க.,வினர்.அந்நிகழ்வுக்குப் பின், அ.தி.மு.க., உறுப்பினர் அல்லாதோரும், ஜெயலலிதா பக்கம் நின்று, அவரை முதல்வர் ஆக்கினர்.இப்போது, ஹிந்து மதத்தை இழிவுப்படுத்தி, சிறுபான்மை மக்களின் ஓட்டுக்களை ஒட்டுமொத்தமாக அள்ளலாம் என, தி.மு.க., தப்புக் கணக்கு போட்டது.
ஹிந்துக்கள் இதுவரை இல்லாத வகையில், தி.மு.க.,விற்கு எதிராக அணி திரண்டனர். இந்த முறை, தி.மு.க., சுதாரித்தது. அதனால் தான், அக்கட்சித் தலைவர் ஸ்டாலின், வேலுடன், 'போஸ்' கொடுத்து, 'நாங்கள் ஒன்றும் ஹிந்து விரோதி அல்ல' என்ற நாடகத்தை துவக்கினார்.தி.மு.க., அழிக்க நினைத்த ஹிந்து மதமும், இனி தீவிரமாக வளரும் என்பதில் சந்தேகமில்லை.
'கமிஷன்' முறையை ஒழிப்போம்!
ஓகை நாகலெஷ்மி, திருநின்றவூர், திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, விழுப்புரம் அருகே உள்ள தளவானுார் கிராமத்தில், பொதுப் பணித்துறை சார்பில், 25.35 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட தடுப்பணை, ஒரே மாதத்தில் உடைந்தது.
பொதுப் பணித் துறை அதிகாரிகள் மேற்கொள்ளும் பணியின் லட்சணம், ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டது.இச்சம்பவத்திற்கு, பொதுப் பணித் துறை அதிகாரிகள், ஆறு பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். சரி... இந்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கையின் முடிவு, ஆறு மாதங்களுக்குள் எடுக்கப்பட வேண்டும்; ஆனால் இது, எத்தனை ஆண்டுகள் இழுத்தடிக்கப்படுமோ?சஸ்பெண்ட் நாட்கள், பணி காலமாகவோ, விடுப்பாகவோ பாவிக்கப்படலாம். இட மாற்றமோ அல்லது எச்சரிக்கையோ வழங்கி, அந்த பிரச்னை முடித்து வைக்கப்படலாம்.தரமற்ற சாலை, வலுவற்ற கட்டடம் அமைப்போர் மீது, இது போன்ற உப்பு சப்பில்லாத நடவடிக்கைகளே வழக்கமாக மேற்கொள்ளப்படுகின்றன. ஏனெனில் அந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில், 40 சதவீதம், 'கமிஷன்' என்ற பெயரில், ஆளுங்கட்சியினர் கொள்ளையடிக்கின்றனர்.
நிதி பற்றாகுறையால், தரமற்ற கட்டடம், சாலை அமைக்கப்படுகிறது; அதில் சேதம் ஏற்பட்டால், தொழில்நுட்பத்தை காரணம் கூறி, எளிதாக தப்பிவிடலாம். தரமற்ற கட்டுமானத்தில் ஈடுபடுவோர் மீதும், அதை கண்காணிக்கத் தவறிய அரசு அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், கமிஷன் முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும். ஆனால் இது, கழகங்களில் ஆட்சியில்
சாத்தியமில்லை.
சச்சின் சொன்னது சரி தான்!
சு.பாலச்சந்தர், வாவிப்பாளையம், திருப்பூர்- மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கிரிக்கெட்டின் நாயகன் சச்சின் பெயரை உச்சரிக்காத, இந்தியர்களே இல்லை எனலாம். உலக கிரிக்கெட் அரங்கில், நம் நாட்டின் பெயரை உயர்த்திக் காட்டியவர் அவர்.டில்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தைப் பற்றி அவர் என்ன கூறினார் என்று, 'குய்யோ, முய்யோ' என, குதிக்கின்றனர். 'விவசாயிகளே... போராட்டம் பண்ணாதீங்க; அது தவறு' என்றாரா இல்லை வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தாரா?'இந்தியாவின் இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது. வெளிப்புற சக்திகள், பார்வையாளராக இருக்கலாம்; ஆனால், பங்கேற்பாளராக இருக்கக் கூடாது. இந்தியர்களுக்கு தான், இந்தியாவைப் பற்றித் தெரியும். இந்த தேசம், ஒற்றுமையாக இருக்கும்' எனக் கூறினார்.
எவ்வளவு அழகான, ஆழமான, சிந்திக்க வேண்டிய கருத்தை வெளியிட்டு இருக்கிறார். ஆனால் சில தீயசக்திகள், அவர் மீது சேற்றை அள்ளி வீசுகின்றன.அவருக்கு வழங்கப்பட்ட, 'பாரத ரத்னா' விருதை கூட திரும்ப பெற சொல்லி, ஒரு சில விஷமிகள் கருத்துக் கூறுகின்றனர்.டில்லியில் நடக்கும் போராட்டத்திற்கு, வெளிநாட்டினர் ஆதரவு தருவது, நம் நாட்டின் மீதுள்ள வஞ்சத்தால் தான். அவர்கள், நம் நாட்டில் உற்பத்தியாகும் விவசாயப் பொருட்களை இறக்குமதி செய்கின்றனரா, விற்பனை தரகராக செயல்படுகின்றனரா?
வெளிநாட்டினருக்கும், இந்த போராட்டத்திற்கும் என்ன சம்பந்தம்? அவர்கள், நம் இறையாண்மை மீது மறைமுக போர் தொடுக்கின்றனர்.சச்சினின் நிலைப்பாடு மிக சரியானதே. தீயசக்திகளுக்கு துணைபோவோர், சச்சினின் புகழை மட்டும் கெடுக்கவில்லை; நம் நாட்டின் புகழையும் கெடுக்கின்றனர் என்பதை, நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE