'வா புலி' என வரவேற்றார் சிவாஜி!
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடனான தன் அனுபவம் குறித்து பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி தாணு: மன்னவரு சின்னவரு என்ற பெயரில், நடிகர் அர்ஜுனை வைத்து படம் தயாரித்தேன். அந்த படத்தில், அர்ஜுன் தந்தையாக, நடிகர் திலகம் சிவாஜி கணேசனை நடிக்க வைக்க நினைத்தேன். அதற்காக அவரின் மூத்த மகன் ராம்குமாரிடம் பேசினோம்.
'சிவாஜி கணேசனுடன் வேலை செய்வதே பெரும் பாக்கியம். வாழ்நாளில் கிடைத்தற்கரிய வாய்ப்பு' என்பதால், அவர் கேட்ட பெரிய தொகையை கொடுக்க ஒப்புக்கொண்டோம்.
சிவாஜியிடம் கதையை சொல்வதற்காக, படத்தின் இயக்குனர் ராமச்சந்திர ராவுடன், சிவாஜியின் சென்னை இல்லம் சென்றேன். முதல் முறையாக, அவரின், 'அன்னை இல்லம்' வீட்டிற்குள் நுழைந்தேன்.
முதல் மாடியில் சிவாஜி இருந்தார். நான் சென்றதும், 'வா புலி' என, சிம்மக்குரலில் வரவேற்றார். அவர் காலில் விழுந்து வணங்கினேன். 'ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ எப்படி இருக்கிறார்' என விசாரித்தவர், அப்போதைய அரசியல் நிலவரம் குறித்தும், அப்போதைய முதல்வர் கருணாநிதி குறித்தும் நிறைய பேசினார்.
படத்தின் படப்பிடிப்பு பெங்களூரு, மைசூரு, சென்னை என பல இடங்களில் நடந்தது. அப்போது அவருக்கு உடல் நிலை சரியில்லை என்பது எங்களுக்கு தெரியாது. அது தெரியாமலேயே ஏகப்பட்ட, 'ஸ்மோக்' போடுவது, 'லைட்ஸ்' வைப்பது என படப்பிடிப்பை சாதாரணமாக நடத்தினோம். அவருக்கு அவை, அலர்ஜி என்பதை தெரியப்படுத்தாமல், நடிக்க ஒத்துழைப்பு கொடுத்தார்.என் மகள் கவிதாவுக்கு திருமணம். சிவாஜி, ரஜினிகாந்த் வீடுகளுக்கு சென்று அழைப்பிதழ் வழங்கி, திருமணத்திற்கு வரவேண்டும் என அழைப்பு விடுத்தேன். அப்போது நான், வைகோவின், ம.தி.மு.க., கட்சியில் இருந்ததால், முதல்வர் கருணாநிதிக்கு கொடுக்காமல் இருந்தேன்.கல்யாணத்திற்கு இரண்டு நாட்கள் தான் இருந்தன. ஆற்காடு வீராச்சாமி போன் செய்து, 'தலைவருக்கு அழைப்பிதழ் கொடுக்கவில்லையா...' என்றார். இதோ வருகிறேன் என கூறி, அவரின் ஆலிவர் ரோடு வீட்டுக்கு சென்றேன். நான் வந்திருப்பது தெரிந்ததும், அமைச்சர்களுக்கு போன் செய்து, அவர்களையும் தன் வீட்டுக்கு வரவழைத்தார் கருணாநிதி. சிறிது நேரத்திற்கு பின், மாடியிலிருந்து இறங்கிய அவர், என்னுடன் அன்பாக பேசினார். அவர் காலில் விழுந்து வணங்கினேன். அப்போது அழுது விட்டேன். அவர் என்னை தேற்றினார். என் மகள் திருமணத்திற்கு, மைசூரில் படப்பிடிப்பிலிருந்த ரஜினியும், சிவாஜியும், பெங்களூருவுக்கு காரில் வந்து, விமானம் மூலம் சென்னை வந்து, கலந்து கொண்டனர். கருணாநிதி, தன் அமைச்சர்கள், 13 பேருடன் வந்து, மணமக்களை வாழ்த்தினார்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE