புதுடில்லி : ''சுதந்திரத்துக்கு முன், நம் நாட்டில் நுாற்றுக்கணக்கான ஆயுத தயாரிப்பு தொழிற்சாலைகள் இருந்தன. ஏராளமான ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அதற்குப் பின், உலகிலேயே, அதிகமான ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்யும் நாடாக, இந்தியா மாறிவிட்டது. இந்த நிலை தற்போது மாறியுள்ளது. தளவாடங்களை அதிக அளவில் தயாரித்து, மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய, அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
ராணுவத்துறைக்கு, 2021 - 22ம் நிதியாண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியை, எப்படி சிறப்பாக பயன்படுத்துவது என்பது தொடர்பாக நடந்த, 'ஆன்லைன்' கருத்தரங்கில், பிரதமர் மோடி நேற்று பேசியதாவது:நம் நாட்டில் பல நுாறு ஆண்டுகளுக்கு முன்பே, ராணுவ தளவாடங்கள் தயாரிக்கப்பட்டு வந்தன. சுதந்திரத்துக்கு முன், நாட்டில், நுாற்றுக்கணக்கான ராணுவ தளவாடங்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் இருந்தன.
தவறி விட்டோம்
இரண்டு உலக போர்களின் போதும், நம் நாட்டிலிருந்து தான், அதிகளவில் ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன; ஆனால், இதை தக்கவைக்க தவறிவிட்டோம். சுதந்திரத்துக்கு பின், ராணுவ தளவாடங்கள் உற்பத்தியில், நாம் கவனம் செலுத்தவில்லை. இதனால், சிறிய ஆயுதத்துக்கு கூட, அடுத்த நாட்டை எதிர்பார்க்கும் நிலை ஏற்பட்டது. உலகிலேயே, ராணுவ தளவாடங்களை, அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது; இது, பெருமைக்குரிய விஷயம் இல்லை.
செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்ப முடிந்த இந்தியாவால், நவீன ஆயுதங்களை தயாரிக்கவும் முடியும். ஆனால், வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்வது எளிது என்ற எண்ணத்தால், தளவாடங்கள் தயாரிப்பை அதிகரிக்க, முந்தைய அரசுகள் ஆர்வம் காட்டவில்லை.இந்த நிலை, கடந்த ஆறு ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. ராணுவ தளவாடங்களின், தயாரிப்புத் திறனை அதிகரிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில், ராணுவத்துக்கு என ஒதுக்கப்பட்ட நிதியில், தளவாடங்கள் தயாரிப்புக்கு என, தனி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதிக ஆர்வம்
அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், ராணுவத்துக்கு, 4.78 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ராணுவ தளவாடங்களை தயாரிப்பதில், தனியார் துறையினரும் அதிக ஆர்வம் காட்ட வேண்டும்.இந்தியர்களால் முடியாதது எதுவும் இல்லை. 'தேஜஸ்' இலகு ரக போர் விமானங்கள், இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன.நம் பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் மீது, அரசு, அதிக நம்பிக்கை வைத்துள்ளது. இந்த நம்பிக்கை தான், தேஜஸ் விமானத்தை, இப்போது வானில் பறக்க வைத்துள்ளதுவிமானப்படைக்கு, 73 தேஜஸ் இலகு ரக விமானங்கள் வாங்க, 48 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. குறைந்தது, 100 முக்கிய தளவாடங்களை, உள்நாட்டிலேயே நம்மால் தயாரிக்க முடியும், இதன் வாயிலாக, இறக்குமதி செய்வதை குறைக்கலாம். ராணுவ தளவாட தயாரிப்பில் சுயசார்பு அடைய, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் பேசினார்.
'வளர்ச்சிக்கு மேற்கு வங்கம் தயாரா?'
மேற்கு வங்க மாநிலத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. மேற்கு வங்கத்துக்கு நேற்று சென்ற, பிரதமர் மோடி, அங்கு பல்வேறு ரயில்வே திட்டங்களை துவக்கி வைத்தார். ஹூக்ளியில் நடந்த பொதுக் கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:வளர்ச்சிக்கு மேற்கு வங்கம் தயாராகிவிட்டது; இதை தான், இங்கு கூடியுள்ள மக்கள், டில்லிக்கு தெரிவிக்கின்றனர்.
வறுமையை ஒழித்த பல நாடுகளில், ஒரு விஷயம் பொதுவாக உள்ளது. அது தான், நவீன உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியது. ஆனால், இந்த மாநிலத்தில், 10 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் கட்சி, தன் ஓட்டு வங்கியை காப்பாற்ற, தாஜா அரசியல் செய்கிறது; இதை, மக்கள் மன்னிக்க மாட்டார்கள். மாநில வளர்ச்சிக்காக, மத்திய அரசு ஒதுக்கிய நிதியை, திரிணமுல் அரசு சரியாக பயன்படுத்தவில்லை; அது மட்டுமின்றி, அந்த நிதியை அவர்களே எடுத்துக் கொண்டனர். மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல், மாநிலத்தில் வளர்ச்சி ஏற்படுவதை தடுத்து விட்டனர். இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE