மத்திய பிரதேசத்தில், கமல்நாத் தலைமையிலான அரசு கவிழ்ந்து, இன்னும் ஒரு ஆண்டு ஆகாத நிலையில், புதுச்சேரியிலும், காங்கிரஸ் அரசு கவிழ்ந்ததால், கட்சி மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
கடந்த ஆண்டின் துவக்கத்தில், கொரோனா தொற்று அபாயம் குறித்து செய்திகள் பரவத் துவங்கியிருந்த சமயம். அப்போது, ஜோதிராதித்யா சிந்தியா ஆதரவு எம்.எல்.ஏ.,க்களால், மத்திய பிரதேச அரசியலில், பெரும் புயல் வீசியது. பெங்களூருவில், எம்.எல்.ஏ.,க்கள் சிறை வைப்பு, பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்லி, உச்ச நீதிமன்றம் உத்தரவு என, 18 நாட்கள் போராட்டத்துக்கு பின்னும், கமல் நாத்தால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. முதல்வர் பதவியை, கடந்த மார்ச், 20ல், அவர் ராஜினாமா செய்ததை அடுத்து, 15 ஆண்டுகளாக காத்திருந்து, மீண்டும் பிடித்த ஆட்சியை, காங்கிரஸ் பறிகொடுத்தது.இந்த சம்பவம் நடந்து, இன்னும் ஒரு ஆண்டு கூட முடிவடையவில்லை. தற்போது, புதுச்சேரியிலும் காங்கிரஸ் அரசு கவிழ்ந்துள்ளது.
ஆட்சி கவிழ்ப்பு
கர்நாடகாவில் இருந்த கூட்டணி அரசையும் சேர்த்தோம் எனில், கடந்த சில ஆண்டுகளில் மட்டும், மூன்று மாநிலங்களில், காங்கிரஸ் தலைமையிலான அரசுகள் கவிழ்ந்து உள்ளன. இந்த மூன்றிலுமே, சொந்தக் கட்சியினரே, தலைமையை எதிர்த்ததும், தங்கள் எம்.எல்.ஏ., பதவிகளை ராஜினாமா செய்ததுமே, ஆட்சி கவிழ்ப்புக்கு காரணமாக இருந்தனர்.
தற்போது பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டுமே, காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மஹாராஷ்டிராவிலும், ஜார்க்கண்ட்டிலும் கூட்டணி ஆட்சியில், காங்கிரஸ் உள்ளது.
ராஜஸ்தானில், அசோக் கெலாட் - சச்சின் பைலட் இடையிலான, கோஷ்டி பூசல், தற்காலிகமாக ஒட்டுப் போடப்பட்டு இருந்தாலும், இரு தரப்புக்கு இடையில், எப்போது வேண்டுமானாலும், மீண்டும் மோதல் ஏற்படலாம்.
மஹாராஷ்டிராவில் கூட, சமீபத்தில், சபாநாயகர் நானா பதோல் ராஜினாமா செய்தபோது, காங்கிரஸ் மீது விமர்சனம் எழுந்தது. இங்கு, கூட்டணி கட்சிகளுக்கு இடையேயான பகை, தொடர்ந்து நீடிக்கிறது.
அதிர்ச்சி
மத்திய பிரதேசத்தை அடுத்து, புதுச்சேரியிலும், தங்கள் அரசு கவிழ்ந்தது, காங்கிரஸ் மேலிடத்துக்கு, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி விவகாரம் குறித்து நேற்று, காங்கிரஸ் மூத்த தலைவர் ஹரிபிரசாத் கூறியதாவது: தேர்தலில் போட்டியிட்டு, பா.ஜ.,வால் பெரும்பான்மை பெற முடியாத மாநிலங்கள் என, சில உள்ளன. அந்த மாநிலங்களில் எல்லாம், அரசுகளை கவிழ்ப்பதை நோக்கமாக வைத்து, பா.ஜ., செயல்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது டில்லி நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE