நேர்மையின் அடையாளமாக உலா வரக்கூடிய, சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்ற சகாயம் ஐ.ஏ.எஸ்., அரசியல் களம் காண வருவாரா, இல்லையா? என்பதற்கு பதில் சொல்லும் கூட்டம், திடீர் ஏற்பாடாக சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள ஒரு மைதானத்தில் நடைபெற்றது.
பெரிதாக விளம்பரம் ஏதுமில்லை. 'வாட்ஸ் ஆப்' பகிர்தல் தான். ஆனாலும், மாலை, 4:00 மணிக்கே நிறைய பேர் கூடியிருந்தனர்.ஆதம்பாக்கம் பாலத்தின் கீழ் உள்ள துாண்களில் ஒட்டியிருந்த சிறு சிறு சுவரொட்டிகள் தான், அங்கே சகாயம் கூட்டம் நடக்கப்போவதை உறுதி செய்தன.சகாயத்தை வழிகாட்டியாகக் கொண்டு நடந்துவரும், மக்கள் பாதை இயக்க தொண்டர்கள், வாகனங்களை நிறுத்த புன்னகையுடன் ஏற்பாடு செய்தனர்.
பேச்சாளர்கள் பேச துவங்கிய பிறகும், சுற்றிலும் பேனர் கட்டும் வேலையும், ஆணி அடிக்கும் வேலையும் நடந்து கொண்டு தான் இருந்தது. வந்தவர்கள் அனைவருக்கும் சாம்பார் சாதம் கொடுத்தனர், சாப்பாடு வேண்டாதவர்களுக்கு சுடச்சுட சுண்டல் கொடுத்தனர்.
கன்னியாகுமரியில் இருந்து, சென்னை வரை சகாயத்தின் தலைமையை விரும்புபவர்கள் இருக்கின்றனர் என காட்டுவதற்காக, மாவட்டத்துக்கு ஒருவர் வீதம், மூன்று நிமிடம் பேச கூறினர். அனைவருமே கீறல் விழுந்த ரிக்கார்டு போல, 'இரு கழகங்களாலும் நாடு நாசமாகி கிடக்கிறது; லஞ்சம் ஊழல் பெருகிக் கிடக்கிறது; நீங்கள் வந்து தான் சரி செய்ய வேண்டும்' என, சகாயத்திற்கு வேண்டுகோள் விடுத்தபடி இருந்தனர்.
கயல் என்பவர் தான் வித்தியாசமாக, 'நாட்டில் மழைக்கு குறைவில்லை, ஆனால், வறட்சி போகவில்லை; விளைச்சலுக்கு குறைவில்லை, ஆனால், பஞ்சம் தீரவில்லை; சட்டங்களுக்கு குறைவில்லை; ஆனால், குற்றங்களுக்கு குறைவில்லை. 'படிப்புக்கு குறைவில்லை, ஆனால், படித்தவர்களுக்கு வேலையில்லை; பணத்திற்கு குறைவில்லை, ஆனால், ஏழைகளுக்கு அது கிடைப்பதே இல்லை' என்று அடுக்கி விட்டு, 'இதற்கு நேர்மையில்லாத, ஊழல் மலிந்த, லஞ்சம் நிறைந்த நிர்வாகம்தான் காரணம்; அதை மாற்ற சரியான ஆள் சகாயம் தான்' என்றார். இவர்கள் பேசுவதை எல்லாம் கேட்க, சகாயம் அங்கே இல்லை.
ஆறரை மணிக்கு தான், மனைவியுடன் வந்தார். பறையிசை முழங்க வரவேற்பு நடந்தது. சகாயத்துக்கு முன், அடுத்த ரவுண்டு பேச்சாளர்கள் பேச அழைக்கப்பட்டனர்.இந்த முறை தொழிலுக்கு ஒருவர் வீதம் பேராசிரியர், ஐ.டி., வல்லுனர், வழக்கறிஞர், மீனவர் என்று வரிசையில் அழைக்கப்பட்டனர். அதில் பத்திரிகையாளர் பாஷா என்பவர், கொஞ்சம் பேச்சு, கொஞ்சம் வீடியோ என, அ.தி.மு.க., அமைச்சர்களை கிண்டல் செய்தார். தொண்டர்கள் சிலர், தெரியாத்தனமாக அதற்கு கைதட்டிவிட்டனர், 'நம்ம சரக்குக்கு வரவேற்பு இருக்கு போலயே...' என, நேரத்தை நீட்டி போரடித்தார்.கடைசியாக சகாயம் பேச வந்தார்.
'உலகத்திலேயே இன்றளவும் மிகச்சிறந்த பேச்சாக கருதப்படுவது, அமெரிக்க அதிபராக இருந்த லிங்கன் பேசிய, 300 வார்த்தைகளைக் கொண்ட குறைந்த நிமிட பேச்சுதான்; ஆகவே சுருக்கமாக பேச விரும்புகிறேன்' என்று சொன்னாரே தவிர, 50 நிமிடத்துக்கு மேல் பேசித் தள்ளிவிட்டார்.'என்னுடைய கடந்த காலம் எல்லோருக்கும் தெரிந்தது தான்; ஆகவே அதை திரும்ப திரும்ப சொல்லப் போவதில்லை' என்றாரே தவிர, கோட்டாட்சி தலைவராக நீலகிரியில் பணி சேர்ந்ததில் தொடங்கி, அறிவியல் இயக்க தலைவராக இருந்து பணி முடித்தது வரையிலான மொத்தத்தையும் தொகுத்தளித்தார். சொல்லாமல் விட்டது, கோலா நிறுவனத்துக்கு பூட்டு போட்ட கதை மட்டுமே.
தன்னை இந்த அரசு கவனிக்கவில்லை, மரியாதை கொடுக்கவில்லை, விருப்ப ஓய்வைக்கூட அவர் விருப்பப்படி எடுக்கவிடவில்லை என்ற ஆதங்கம் சகாயம் பேச்சில் பொங்கி வழிந்தது. பணியை துறக்கும் நாளன்று, இரவு, 11:00 மணிக்கு கூட, இந்த அரசுக்கு மூன்று கனமான கருத்துருக்களை கொடுத்ததாக தெரிவித்தார், கவனிக்காத, மரியாதை கொடுக்காத அரசு, அவருடைய கருத்துருவை மட்டும் ஏற்றுக் கொள்வர் என, எப்படி நினைத்தாரோ தெரியாது.பேச்சுக்கு கைதட்டல் வரும் என எதிர்பார்த்து, சில இடங்களில் இடைவெளி கொடுத்தார்.
விடாமல் கடித்த கொசுவை விரட்ட தட்டினார்களே தவிர, சகாயம் பேச்சுக்கு கைதட்டவில்லை. 'எனக்கு எந்த பதவி கிடைத்தாலும், அதை மக்களுக்கு செய்யும் உதவியாகத்தான் மாற்றினேன், ஏரோட்டும் விவசாயி காரோட்டுவதைக் கண்டு மகிழ்ந்தேன்' என, எதுகை மோனை மீதும், அவ்வப்போது ஏறி இறங்கினார்.மேட்டருக்கு எப்ப வருவார்... அரசியல் களம் காண வரப்போகிறாரா... இல்லையா என, செவிகள் சோர்ந்த நேரத்தில், 'அரசியல் என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல, நாம் மக்கள் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்...' என, இழுத்தார்.
அவ்வளவு தான்; அரசியலுக்கு 'எண்ட் கார்டு' போட்டுவிட்டார் என்று நினைத்தபோது, 'ஆட்சி அதிகாரம் இருந்தால் தான், நாம் நினைப்பதை சாதிக்க முடியும் என்று இங்கு கூடியுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கருதுவதால், அரசியல் களத்திற்கு வர சம்மதிக்கிறேன்' என்றார்.
அரங்கில் ஒரே ஆரவாரம், அதிர்வேட்டுகள் முழங்கின. 'நமது கூட்ட கலாச்சாரத்தில் எப்படி பொன்னாடை போர்த்துதல், மாலை அணிவித்தல் கிடையாதோ, அதே போல இனிமேல், வெடிபோடும் கலாசாரமும் இருக்கக்கூடாது' என்றார். சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்தனர். அதையும் தவிர்க்குமாறு சொல்லி இருக்கலாம்.
சரி, அடுத்து நன்றி சொல்லி முடிக்கப் போகிறார் என்று பார்த்தால், காமராஜர், கக்கன், அண்ணாதுரை கதைகளை சொல்லி, 'இவர்களைப் போல எளிமையாக துாய்மையாக வாழ்நாளெல்லாம் இருப்பேன் என்று உறுதி எடுத்துக் கொண்டவர்கள் மட்டும் என்னுடன் வாருங்கள், இணைந்து பயணிப்போம்' என்று அவர் சொன்னது, அதிர்வேட்டு சத்தத்தில் கேட்கவும் இல்லை; கேட்கும் நிலையில் தொண்டர்களும் இல்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE