தஞ்சையில் தனித்துவமான, அரசியல் ஆவர்த்தனம் செய்து வருபவர், ஐவர் அணியில் ஒருவரும், அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளருமான, ராஜ்யசபா எம்.பி., வைத்திலிங்கம். ஆரம்பத்தில் இருந்து, சசிகலா தரப்புக்கு எதிரானவராக காட்டிக் கொண்டவர், சமீப காலமாக, அடக்கி வாசித்து வருகிறார்.
ஒரத்தநாடு சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட போது, 'சசிகலா தரப்பினரால் தான் தோல்விஅடைந்தேன்' என்று சரண்டராகி, எம்.பி., பதவியை பெற்று, மத்திய அமைச்சராகும் எதிர்பார்ப்புடன், ஓ.பி.எஸ்.,சுக்கு நெருக்கமாக இருந்து வந்தார். அமைச்சரவை விரிவாக்கத்துக்கு வாய்ப்பு இல்லாத நிலையில், மத்திய அமைச்சராக முடியாது என்பதை உணர்ந்த வைத்திலிங்கம், ஒதுங்குவது போல பதுங்கி வருகிறார். சசிகலா விடுதலையானதும், அ.தி.மு.க.,வில் நிலைமை மாறியிருக்கிறது. இருப்பவர்களை தக்கவைக்க வேண்டிய நெருக்கடி, ஆளும் தலைமைக்கு உள்ளது.
இந்நிலையில், ஒரத்தநாடு தொகுதியில், 'சீட்' கேட்டு, எம்.எல்.ஏ., ஆக வேண்டும் என்ற, நிலைப்பாட்டுக்கு, வைத்திலிங்கம் வந்துள்ளார். சொந்த தொகுதியான ஒரத்தநாட்டில் வெற்றி பெற வேண்டுமானால், அ.ம.மு.க., ஆதரவு அவசியம். குறிப் பாக, செல்வாக்கு மிகுந்த, அ.ம.மு.க., மாவட்ட செயலர் சேகர், போட்டியிடாமல் இருக்க வேண்டும். இதையெல்லாம் அசை போட்ட வைத்திலிங்கம், அ.தி.மு.க., கொடி கட்டிய விவகாரத்தில், சசிகலா மீது புகார் கொடுக்கப்பட்டது. அதற்காக, அமைச்சர்களுடன் செல்ல வேண்டியவர் வைத்தி. சத்தம் போடாமல், வீட்டில் பதுங்கி கொண்டார்.
சசிகலாவின் உறவினரான தனசேகரனையும், சில நாட்களுக்கு முன் சந்தித்துள்ளார். இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்.,சிடம், 'அ.ம.மு.க.,வை இணைத்தால் தான் வெற்றி பெற முடியும். இல்லாவிட்டால், டெல்டாவிலும், தென் மாவட்டங்களிலும் தோல்வி தான்' என பேசத் துவங்கிவிட்டார். இந்நிலையில், தஞ்சாவூரிலும், கும்பகோணத்திலும், அ.தி.மு.க., சார்பில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில், 'அ.தி.மு.க.,விற்கு இந்த தேர்தல், வாழ்வா, சாவா போராட்டம். அனைவரும் ஒன்றுபட்டால் தான் வெற்றி பெற முடியும்' என, சசிகலாவை மனதில் வைத்தே பேசியுள்ளார்.
சசிகலாவை அனுசரித்து போக, வைத்தி, முடிவு செய்துவிட்டார் என்றும், விரைவில், சசிகலாவை சந்திப்பார் என்றும், தஞ்சை மாவட்ட அ.தி.மு.க.,வினர் பேசி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE