சென்னை : தேர்தலுக்கு முன் அர்ப்பணிப்பதற்காக, மேட்டூர் - சரபங்கா நீரேற்று திட்டத்தை விரைந்து முடிக்க, பொதுப்பணி துறையினருக்கு, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார்.
மாவட்டத்தில்,எடப்பாடி, சங்ககிரி, ஓமலுார் உள்ளிட்ட பகுதிகளில், தண்ணீர் தட்டுப்பாடு அதிகம் உள்ளது. இங்குள்ள, 100 ஏரிகளுக்கு, மழைக் காலங்களிலும் போதிய நீர் கிடைப்பது கிடையாது. இதனால், சாகுபடி மட்டுமின்றி, குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதிலும், சிக்கல் நீடித்து வருகிறது.இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், மேட்டூர் அணையின் உபரி நீரை, சேலம் மாவட்டத்தில் உள்ள, 100 வறண்ட ஏரிகளுக்கு திருப்பும் வகையில், நீரேற்று திட்டத்தை செயல்படுத்த, அரசு முடிவெடுத்துள்ளது.
இதற்கு, மேட்டூர் - சரபங்கா நீரேற்று திட்டம் என, பெயரிடப்பட்டு உள்ளது.இந்த திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, 2020 மார்ச்சில் நடந்தது. இப்பணிகளுக்கு, 565 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன. அதில், நில எடுப்பு பணிகளுக்கு மட்டும், 35 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டு உள்ளது.இத்திட்டத்தை தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக அர்ப்பணிக்க, முதல்வர் இ.பி.எஸ்., முடிவெடுத்து உள்ளார். அவ்வாறு செய்வதால், எடப்பாடி தொகுதியில், முதல்வருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, மேட்டூர் -சரபங்கா இணைப்பு திட்டத்திற்கான இறுதிக்கட்ட பணி நடந்து வருகிறது. இதை விரைவுப்படுத்தி, 15 நாட்களில் முடிக்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, பொதுப்பணித் துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட, உயர் அதிகாரிகள் குழுவினர், நேற்று சேலம் சென்று, பணிகளை ஆய்வு செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE