மதுரை : மதுரை, மீனாட்சி மிஷன் மருத்துவமனையில், மூளைச்சாவு அடைந்த பெண், தானம் செய்த உறுப்புகள் மூலம், ஏழு பேர் வாழ்வு பெற்றனர்.
பெண்ணின் இதயம், விமானம் மூலம் சென்னைக்கு எடுத்து செல்லப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழநியைச் சேர்ந்த சேகர் மனைவி பிரமிளா, 52; விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். மீனாட்சி மிஷன் மருத்துவமனையில், பிப்., 20ல் மூளைச்சாவு அடைந்தார். உறவினர்கள் அனுமதியுடன், பிரமிளாவின் இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள் தானமாக பெறப்பட்டன. அரசின் அனுமதியுடன், ஐந்து மணி நேர அறுவை சிகிச்சை மூலம், பிரமிளாவின் உடல் உறுப்புகள் அகற்றப்பட்டன.
ஒரு சிறுநீரகம், கல்லீரல் ஆகியவை, மீனாட்சி மிஷன் மருத்துவமனையில், வெவ்வேறு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன. மற்றொரு சிறுநீரகம், கோவை மருத்துவமனைக்கும், இரு கண்கள், மதுரை அரவிந்த் மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டன. இதயமும், நுரையீரலும் சென்னையில் உள்ள நோயாளிகளுக்கு பொருத்த, விமானத்தில் எடுத்துச் செல்லப்பட்டன. சாமர்த்திய டிரைவர்மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் இருந்து, 20 கி.மீ.,யில், விமான நிலையம் அமைந்துள்ளது. பொதுவாக, இங்கிருந்து காரில் செல்ல, அரை மணி நேரம் ஆகும். ஆனால், சாமர்த்தியமாக செயல்பட்ட ஆம்புலன்ஸ் டிரைவர் பாலசுப்பிரமணியன், 12 நிமிடங்களில், விமான நிலையத்தை அடைந்தார். வழி நெடுக போலீசார், போக்குவரத்தை சீர் செய்தனர். இதயம், பத்திரமாக, சென்னை சென்று சேர்ந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE