கோவை:சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படும் பத்திரத்தின்படி, வருவாய்துறையில் பட்டா மாறுதல் செய்வதில், தொடர்ந்து இழுபறி நிலை நீடித்து வருகிறது.கோவை மாவட்டத்திலுள்ள, 11 சார்பதிவாளர் அலுவலகங்களில், ஆன்லைன் மூலம் பத்திர பதிவு செய்யப்படுகிறது. பட்டா மாறுதலுக்கு, ஒரு சர்வே எண்ணுக்கு 400 ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.சொத்து தொடர்பான பத்திரம், வில்லங்க சான்று போன்றவை, வருவாய்துறைக்கு ஆன் லைன் மூலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்படுகிறது.இதற்கான குறுஞ்செய்தி, பத்திரம் பதிவு செய்தவரின் போனுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதன் பின், இ-சேவை மையத்தில் புதிதாக பட்டா மாறுதலுக்கு, விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை.ஆனால், சார்பதிவாளர் அலுவலகம் மூலம், செல்லும் பத்திரம் தொடர்பான சொத்துக்கு, வருவாய்துறையில் பட்டா மாறுதல் செய்வதில், இழுபறி நிலை நீடித்து வருகிறது.இதற்காக, பொதுமக்கள் தொடர்ந்து, வருவாய்துறை அலுவலகத்திற்கு சென்று, மீண்டும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, பட்டா மாறுதல் செய்ய, படாதபாடுபடுகின்றனர்.இதனை தவிர்க்க, வருவாய்துறைக்கு அனுப்பப்படும் பத்திரத்தின் அடிப்படையில், ஆன் லைன் மூலம் பட்டா மாறுதல் செய்து, கணினி சிட்டாவில் பெயர் தாக்கல் செய்ய, வருவாய்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE