விவசாய உதவித்தொகை மீண்டும் பயனாளிகள் தேர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விவசாய உதவித்தொகை மீண்டும் பயனாளிகள் தேர்வு

Added : பிப் 22, 2021
Share
சென்னை : விவசாய உதவித் தொகை திட்டத்தில், பல்வேறு கெடுபிடிகளுடன் பயனாளிகள் தேர்வை, வேளாண் துறை துவங்கியுள்ளது. விவசாயிகளுக்கு சாகுபடி நேரத்தில் உதவும் வகையில், ஆண்டுதோறும், 6,000 ரூபாய் விவசாய உதவித்தொகை வழங்கும் திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. மூன்று கட்டமாக, தலா, 2,000 ரூபாய் வீதம், விவசாயிகள் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில், 40

சென்னை : விவசாய உதவித் தொகை திட்டத்தில், பல்வேறு கெடுபிடிகளுடன் பயனாளிகள் தேர்வை, வேளாண் துறை துவங்கியுள்ளது.

விவசாயிகளுக்கு சாகுபடி நேரத்தில் உதவும் வகையில், ஆண்டுதோறும், 6,000 ரூபாய் விவசாய உதவித்தொகை வழங்கும் திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. மூன்று கட்டமாக, தலா, 2,000 ரூபாய் வீதம், விவசாயிகள் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில், 40 லட்சம் பேர் வரை சேர்க்கப்பட்டனர். விவசாயிகள் அல்லாதவர்கள் பலர் சேர்ந்துள்ளதாக தகவல் வெளியானது. உடனே, வேளாண் துறை கொடுத்த புகாரின்படி, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தினர். அதில், 6.09 லட்சம் தகுதியற்ற பயனாளிகள் சேர்க்கப்பட்டது தெரிய வந்தது.

அவர்களிடம் இருந்து இதுவரை, 162 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையே, தகுதியுள்ள விவசாயிகள் பலரும், இத்திட்டத்தில் சேர முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, பல்வேறு கெடுபிடிகளுடன் பயனாளிகள் தேர்வை, வேளாண் துறை துவங்கியுள்ளது.இதுவரை, 8,881 பேர், இத்திட்டத்தில் இணைய விண்ணப்பம் செய்துள்ளனர். அவர்களின் தகுதி சான்றுகள் சரிபார்க்கப்பட்டு, 1,467 பேர், பயனாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.மீதமுள்ள விவசாயிகளின் தகுதியை ஆராயும் பணி, வேளாண் துறையில் தீவிரமாக நடக்கிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X