கோவை:கலெக்டர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் 640 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ், அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. குழந்தைகள், வளர் இளம் பெண்கள், கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள் நலன் பேணும் பணியில், இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.இவர்கள், தங்களை அரசு ஊழியர்களாக்கி, கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்று, நீண்ட காலமாக அரசை கோரி வருகின்றனர். இத்துடன், குறைந்தபட்ச ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை கலெக்டர் அலுவலகம் முன், காலை முதல் மதியம் வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் 640 பேரை, போலீசார் கைது செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கூறுகையில், 'அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கை தொடர்பாக, சட்டசபையில், 110 விதிப்படி முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள், அமல் செய்யப்படவில்லை. சமூக நலத்துறை அமைச்சர் பேச்சு நடத்தி, ஏற்றுக்கொண்டதையும் அமல் செய்யவில்லை. எனவே தான் காத்திருப்பு போராட்டம் நடத்துகிறோம்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE