திண்டுக்கல் : ''ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் வகையில் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது'' என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறினார்.
திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: 30 ஆண்டு போராட்டத்தால் தேவேந்திர குல வேளாளர் மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. தேவேந்திர குல வேளாளர்களை தவறுதலாக பட்டியல் இனத்தில் சேர்த்ததால் சமுதாயத்தில் ஒதுக்கியே வைக்கப்பட்டுள்ளனர். மனதளவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.எங்களை பட்டியல் இனத்திலிருந்து நீக்கி பொதுப்பிரிவில் சேர்க்க வேண்டும். தனிப்பட்ட முறையில் இடஒதுக்கீடு மற்றும் சலுகைகள் தேவையில்லை. 2010 தி.மு.க., ஆட்சியில் பட்டியல் இனத்தினருக்கான 3 சதவீத உள்ஒதுக்கீட்டில் தேவேந்திரகுல வேளாளர்களுக்கு எந்த சலுகையும் கிடைக்கவில்லை.
புதிய தமிழகம் சார்பில் தமிழக வளர்ச்சி என்ற தலைப்பில் மார்ச் 4-ல் கூட்டம் நடைபெறும். அதில் தேர்தல் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்கப்படும்.பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் இணைந்து குறைக்க வேண்டும். தேர்தல் பிரசாரம், செலவுகளுக்கு கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால் பெரிய கட்சிகள் விதிமுறைகளை மீறி ஓராண்டுக்கு முன்பே பிரசாரத்தை துவங்கியுள்ளன. சின்னம் வழங்குவதில் தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டுகிறது. யாருக்கும் நிரந்தர சின்னம் ஒதுக்ககூடாது.
ஆண்டுக்கு ஒருமுறை புதிதாக கொடுக்க வேண்டும். மொத்தத்தில் தேர்தல் ஆணைய செயல்பாடுகள் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி உள்ளன'' என்றார்.நிலக்கோட்டையில் அவர் கூறுகையில், ''தேர்தலுக்காக கூட்டணி சேர்க்கும் திராவிட கட்சிகள் வெற்றிக்கு பின் ஆட்சியில் பங்கேற்க செய்ய வேண்டும். மத்தியில் பா.ஜ., தனி பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி கட்சிகளை ஆட்சியில் பங்கேற்க செய்துள்ளது. இதை பின்பற்றினால் தமிழகம் மேலும் வளமாகும். எங்கள் கோரிக்கை நிறைவேறிய பின் எந்த கூட்டணி என்பதை கூறுவோம்'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE