கோவை:அமைச்சர் குறித்து அவதுாறு பரப்பிய வழக்கில், தி.மு.க., எம்.எல்.ஏ.,வுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை தளர்த்தப்பட்டது.கோவை, குனியமுத்துாரை சேர்ந்த 'ஆலயம் பவுண்டேஷன்' கட்டுமான நிறுவன இயக்குனர் ரங்கராஜ் மற்றும் அமைச்சர் வேலுமணி குறித்து, சமூக ஊடகங்களில் அவதுாறு பரப்பியதாக, சிங்காநல்லுார் தி.மு.க., எம்.எல்.ஏ., கார்த்திக் மீது, புகார் அளித்தனர்.குனியமுத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்த நிலையில், முன் ஜாமின் கோரி, கோவை மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில், கார்த்திக் மனு தாக்கல் செய்தார். கீழ்கோர்ட்டில் சரணடைந்து ஜாமின் பெற்றுக்கொள்ள, நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.அதன்படி, ஜே.எம்:7, கோர்ட்டில் கடந்த 5ம் தேதி சரணடைந்ததை தொடர்ந்து, அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. குனியமுத்துார் போலீஸ் ஸ்டேஷனில் மறு உத்தரவு வரும் வரை தினசரி காலையில் கையெழுத்திட, நிபந்தனை விதிக்கப்பட்டது.அதன்படி, கையெழுத்திட்டு வந்தார். இந்நிலையில், நிபந்தனையை தளர்த்த கோரி, மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில், மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரித்த நீதிபதி, கார்த்திக்கிற்கு விதிக்கப்பட்ட நிபந்தனையை தளர்த்தி உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE