மேட்டுப்பாளையம்:சிறுமுகை வனப்பகுதியில், 8 கிலோ மீட்டருக்கு, அகழிகளை சீரமைக்கும் பணிகளில், வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.சிறுமுகை வனப்பகுதி அருகே ஓடந்துறை, ஊமப்பாளையம், பாலப்பட்டி, எம்.ஜி.ஆர்., நகர், வேடர் காலனி, வச்சினம்பாளையம், லிங்காபுரம், மூளையூர், அம்மன் புதூர், சம்பரவள்ளி, சிட்டேபாளையம், பெத்திக்குட்டை, ஜெ.ஜெ., நகர் கிராமங்களில் வாழை, காய்கறி செடிகள் ஆகியவற்றை, விவசாயிகள் பயிர் செய்துள்ளனர்.இரவில் யானைகள், மான்கள், காட்டுப் பன்றிகள் ஆகியவை விவசாய நிலங்களில் புகுந்து, பயிர்களை அழித்து சேதம் செய்து வந்தன.வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்கு வருவதை தடுக்க, வனத்துறை சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வனப்பகுதி ஓரத்தில் அகழி தோண்டினர்.காலப்போக்கில் மழையின் காரணமாக, பல இடங்களில் இந்த அகழிகள் மண் முடியும், சேதமடைந்தும் உள்ளன. இதன் வழியாக, யானைகள் அகழியை தாண்டி, விவசாய நிலங்களுக்கு வந்து, பயிர்களை சேதம் செய்து வருகின்றன.யானைகள் விவசாய நிலங்களுக்கு வருவதை தடுக்க, அகழியை தூர் எடுத்து சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் வனத்துறை சார்பில், அகழி சீரமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.2 மீ., ஆழம்; 3 மீ., அகலம்!சிறுமுகை வனச்சரக அலுவலர் செந்தில் குமார் கூறுகையில், "சிறுமுகை வனப்பகுதியில், ஓடந்துறையிலிருந்து, லிங்காபுரம் வழியாக பெத்திக்குட்டை, ஜெ.ஜெ., நகர், புதுக்காடு வரை வனப்பகுதி ஓரத்தில் அகழி தோண்டப்பட்டு உள்ளது. இதில் சேதமடைந்த பகுதிகளில், எட்டு கி.மீ.,க்கு, அகழியை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இரண்டு மீட்டர் ஆழம், மூன்று மீட்டர் அகலத்தில் சீரமைக்கப்படுகிறது," என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE