கோவை ரயில்வே ஸ்டேஷன் மற்றும் அரசு மருத்துவமனை பகுதியில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தடுக்க, லங்கா கார்னர் சந்திப்பில் சிறிய மாற்றம் செய்ய வேண்டுமென்ற, கோரிக்கை எழுந்துள்ளது.
கோவை நகரில் ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ள ரோட்டிலேயே கலெக்டர் ஆபீஸ், எஸ்.பி., ஆபீஸ், ஆர்டிஓ ஆபீஸ் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகங்கள் இருப்பதோடு, அதற்கு அருகிலேயே, அரசு மருத்துவமனையும் அமைந்திருப்பதால், அந்தப்பகுதியில் பகல் இரவாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது, வாடிக்கையாகி விட்டது.
இதற்கு நிரந்தரத் தீர்வு காண்பது குறித்து அரசியல்வாதிகள், அதிகாரிகள் யாரும் எந்த அக்கறையும் காட்டுவதில்லை.கடந்த பத்தாண்டுகளில் அரசு மருத்துவமனை, கலெக்டர் ஆபீஸ், எஸ்.பி., ஆபீஸ் எல்லாவற்றிலும் பல நுாறு கோடி ரூபாய் மதிப்பில், பெரிய பெரிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.ஆனால் இவற்றுக்குத் தினமும் வந்து செல்லும் பல ஆயிரம் மக்கள், ரோட்டில் படுகிற சிரமங்கள், பாதுகாப்பின்மை பற்றி, யாருமே கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் பல நுாறு கோடி ரூபாய்க்கு பணிகள் நடக்கின்றன. ஆனால் மக்கள் பாதுகாப்பாக சாலையைக் கடப்பதற்கு, ஒரு சின்ன முயற்சியும் எடுக்கப்படுவதில்லை.அரசு மருத்துவமனை மற்றும் ரயில்வே ஸ்டேஷன் முன்புறத்தில், பாதசாரிகள் ரோட்டைக் கடப்பதற்கு, நடைமேம்பாலம் அமைக்கும் திட்டம், கால் நுாற்றாண்டு கனவாக நீடிக்கிறது.
ரயில்வே ஸ்டேஷன் ரோட்டை, அரசு இடங்களை பயன்படுத்தி அகலப்படுத்த வேண்டுமென்ற ஆலோசனை முன் வைக்கப்பட்டும், அதுவும் கண்டுகொள்ளப்படவில்லை. இப்போது லங்கா கார்னர் சந்திப்பில் ஏற்படும் நெரிசலையும், முட்டல் மோதலையாவது தவிர்க்க ஒரு சிறிய மாற்றத்தைச் செய்ய வேண்டுமென்ற, கோரிக்கை எழுந்துள்ளது.அரசு மருத்துவமனையின் பழைய மார்ச்சுவரி கட்டடம் இடித்து அகற்றப்பட்டுள்ளது. அந்த இடத்தை அகலப்படுத்தி, 'பஸ் பே' ஆக பயன்படுத்தலாம்.ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ராமநாதபுரம் நோக்கிச் செல்லும் பஸ்களை, இங்கு நிறுத்தி பயணிகளை ஏற்றலாம். அரசு மருத்துவமனை முன்பாக நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவதால், அங்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசலை, இதன் வாயிலாக தவிர்க்கலாம்.'கோவை எங்கள் கோட்டை' என்று மேடையில் பெருமை பேசினால் போதாது.
கோட்டையில் வசிக்கும் மக்களின், இது போன்ற சின்ன, சின்ன தேவைகளை நிறைவேற்றவும் வேண்டும். அதுவே ஒரு நல்ல ஆட்சிக்கு அழகு.எளிதில் செய்யக்கூடிய இந்த சின்ன வேலையையாவது, தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பு துவக்க வேண்டும்.ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் பல நுாறு கோடி ரூபாய்க்கு பணிகள் நடக்கின்றன. மக்கள் பாதுகாப்பாக சாலையைக் கடப்பதற்கு, ஒரு சின்ன முயற்சியும் எடுக்கப்படுவதில்லை.-நமது நிருபர்-
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE