சொல்றதுக்கே அவமானமா இருக்கே...! | Dinamalar

'சொல்றதுக்கே அவமானமா இருக்கே...!'

Updated : பிப் 23, 2021 | Added : பிப் 23, 2021 | |
வீட்டு வராண்டாவில் அமர்ந்து நாளிதழ்களை படித்துக் கொண்டிருந்தாள் சித்ரா.பில்டர் காபி கொடுத்து உபசரித்த மித்ரா, ''தி.மு.க.,காரங்க கூட்டம் நடத்துன இடத்துக்கு பக்கத்திலேயே, ஏட்டிக்கு போட்டியா, ஆளுங்கட்சிக்காரங்களும் கூட்டம் நடத்துனாங்களாமே,'' என, பேச்சை ஆரம்பித்தாள்.''ஆமா, மித்து! கொடிசியா பக்கத்துல இருக்கற மைதானத்துல, 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சி
 'சொல்றதுக்கே அவமானமா இருக்கே...!'

வீட்டு வராண்டாவில் அமர்ந்து நாளிதழ்களை படித்துக் கொண்டிருந்தாள் சித்ரா.பில்டர் காபி கொடுத்து உபசரித்த மித்ரா, ''தி.மு.க.,காரங்க கூட்டம் நடத்துன இடத்துக்கு பக்கத்திலேயே, ஏட்டிக்கு போட்டியா, ஆளுங்கட்சிக்காரங்களும் கூட்டம் நடத்துனாங்களாமே,'' என, பேச்சை ஆரம்பித்தாள்.

''ஆமா, மித்து! கொடிசியா பக்கத்துல இருக்கற மைதானத்துல, 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சி நடத்துனாங்க; 18 ஆயிரம் பேர் வந்திருந்ததா, உளவுத்துறை 'ரிப்போர்ட்' அனுப்பியிருக்கு. அரண்டு போன ஆளுங்கட்சியினர், மறுநாளே, அந்த இடத்துக்கு பக்கத்துல, 'பெண்மையை போற்றுவோம்'ங்கிற பேர்ல, 'மீட்டிங்' நடத்தியிருக்காங்க,''

''அக்கா, நம்மூரு ஆளுங்கட்சி கோட்டையாச்சே,'

'''ஆமாப்பா, அப்படிதான், ஒவ்வொரு கூட்டத்திலும் மார்தட்டினாலும், திருமண நிகழ்ச்சிக்கு எதிர்பார்த்த கூட்டம் வராததால, ஆளுங்கட்சிக்காரங்க பயத்துல இருக்காங்க. சிறுபான்மையினர் ஓட்டு பிரிஞ்சு போயிடக் கூடாதுன்னு, கிறிஸ்தவர்களையும், இஸ்லாமியர்களையும் தனித்தனியா ஒருங்கிணைச்சு, இதுவரைக்கும் செய்த உதவிகளை பட்டியலிட்டு பேசியிருக்காங்க; இதுக்குமேல இன்னும் என்ன எதிர்பார்க்கிறீங்கன்னு, வெளிப்படையாவே கேட்குறாங்க,''

''தேர்தலுக்கு அரசியல் கட்சிக்காரங்க 'பட்டுவாடா' ஆரம்பிச்சிட்டாங்கன்னு கேள்விப்பட்டேனே,''

''ஆமாப்பா, நானும் கேள்விப்பட்டேன். 'கோவை'யில இருக்கிற 'புதுார்'ல நண்பர் தோட்டம் இருக்கு; மகளிர் சுய உதவி குழுவினரை வரவழைச்சு பட்டுவாடா செஞ்சிருக்காங்க; தேர்தல் அறிவிப்புக்கு பின்னாடி, 'மழை' இன்னும் அதிகமா பொழியும்னு சொல்றாங்க,''

''ஜெ., பிறந்த நாளையொட்டி, வீடு வீடா பரிசுப்பொருள் கொடுக்குறாங்களாமே, உண்மையா,''

''என்ன, இப்படி கேட்டுட்டே, தொகுதிக்கு, 75 ஆயிரம் குடும்பத்துக்கு, இலவசமா சில்வர் தட்டு, வேஷ்டி, துண்டு, சேலை கொடுக்குறாங்க. வீடு தேடி பரிசு பை வர்றதுனால, மக்கள் ஆச்சரியத்துல இருக்காங்க. இலவச பை கெடைக்காதவங்க, ஆளுங்கட்சிக்காரங்களை தேடிட்டு இருக்காங்க,''''அதெல்லாம் இருக்கட்டும்! எந்த கூட்டத்துக்கு போனாலும் ஸ்டாலின் சொதப்புவாரே; நம்மூர்ல எப்படி இருந்துச்சுன்னு சொல்லவே இல்லையே,'' என, வம்புக்கு இழுத்தாள் மித்ரா.

''மித்து, 'செட்டப் செல்லப்பா' மாதிரி, ஏற்கனவே, 'பிக்ஸ்' பண்ணியிருந்தவங்கள்ல ஏழு பேருக்கு பேசுறதுக்கு வாய்ப்பு கொடுத்தாரு. ஒருத்தரு சிலம்ப கலையை பத்தி பேசுனாரு. அதுக்கு பதிலளிக்கும்போது, வாய் குளறி, சிற்பக்கலைன்னு ஸ்டாலின் ஆரம்பிச்சாரு; கொஞ்ச நேரத்துல சுதாரிச்சு, சிலம்பக்கலைன்னு மாத்திட்டாரு,''''ஒரு லேடி, ரோடு சரியில்லைன்னு சொன்னாங்க. ஸ்டாலின் பதில் சொன்னப்ப, 'எச்.ஐ.எச்.எஸ்., காலனி பாலம் பத்தி எழுதிக் கொடுத்திருங்காங்க'ன்னு பேசுனாரு. அதை பார்க்கும்போது, ஏற்கனவே செட்டப் செஞ்ச ஆளுங்கன்னு தெளிவா தெரிஞ்சது,''

''அப்படியா,'' என, வாயை பிளந்தாள் மித்ரா.

''இன்னொரு கூத்தும் நடந்துச்சுப்பா. சிறு குறு தொழில்நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக, ஒரு வருஷத்துக்கு முன்னாடி, சேனல்களில் வெளிவந்த செய்திகளை ஒருங்கிணைத்து, குறும்படமா வெளியிட்டாங்க. தொழில்துறையை சேர்ந்த நிர்வாகி ஒருத்தர் பேசுற காட்சியை ஒளிபரப்பு செஞ்சாங்க; அவரு இறந்து, ஆறு மாசத்துக்கு மேலாச்சாம்; அது கூட தெரியாம, குறும்படம் வெளியிட்டு இருக்காங்க,''

''இன்னொரு முக்கியமான விஷயம் என்னான்னா, 'ஐபேக்' ஊழியர்கள் ஆளுமையில் கூட்டம் நடந்ததுனால, கட்சி நிர்வாகிகள் 'அப்செட்'டுல இருக்காங்க; தெருத்தெருவா கம்பம் நட்டு, கூட்டம் நடத்தி, கட்சியை வளர்த்தோம்; இப்ப, மேடை பக்கமே வர விட மாட்டேங்கிறாங்க. தலைவர் கிட்ட நெருங்கவும் விட மாட்டேங்கிறாங்க. கட்சிக்காரங்கன்னு சொல்றதுக்கே அவமானமா இருக்குன்னு புலம்பிட்டு இருக்காங்க,''

''ஆளுங்கட்சி வி.ஐ.பி., தன்னுடைய வாரிசையும் விழாக்களுக்கு அழைச்சிட்டு வர்றாராமே,''

''யெஸ், நீ சொல்றது உண்மைதான்; நானே நேர்ல பார்த்திருக்கிறேன். தொண்டாமுத்துார் தொகுதியில நடக்குற முக்கிய நிகழ்ச்சிக்கு, வாரிசை அழைச்சிட்டு வர்றாரு. கிரிக்கெட் அணியினருக்கு இலவசமா விளையாட்டு உபகரணங்கள் வழங்குற விழாவுல பேசுறப்போ, 'கிட்' தரமானதா இருக்கணுங்கிறதுக்காக, வெளிமாநில நிறுவனத்துக்கு ஆர்டர் செஞ்சு, வாங்கிட்டு வந்ததே, தன்னுடைய வாரிசுதான்னு வெளிப்படையா சொல்லியிருக்காரு,'' என்றாள்.

''கலெக்டர் ஆபீசுக்கு போகணும், வர்றீயா,'' என கேட்டபடி, ஸ்கூட்டரை தயார்படுத்தினாள் சித்ரா.

''இதோ வந்துட்டேன்,'' என்றபடி, தொற்றிக் கொண்ட மித்ரா, ''மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடு ரொம்பவும் மோசமா போயிட்டு இருக்குன்னு சொல்றாங்களே,'' என, கொக்கி போட்டாள்.

''ஆமாப்பா, கொரோனா பரவல் உச்சத்துல இருந்த காலத்துல, அரசுக்கு பக்கபலமா லேப் டெக்னீசியன்கள் வேலை பார்த்தாங்க. மாசம், 10 ஆயிரம் ரூபா சம்பளம் கொடுத்தாங்க. இப்ப, என்னடான்னா, 'கொரோனா பரவல் குறைஞ்சிடுச்சு; நீங்க வீட்டுக்கு போகலாம்'னு சொல்லிட்டாங்களாம்,''

''என்னங்க, திடுதிப்புன்னு இப்படி சொல்றீங்களேன்னு, டெக்னீசியன்கள் கேட்டிருக்காங்க. 'அரசாங்கத்துல இனி உங்களுக்கு சம்பளம் தர மாட்டாங்க; நாங்க என்ன செய்ய முடியும்'னு அதிகாரிங்க சொல்லியிருக்காங்க,''

''எங்க உயிரையும், எங்க குடும்பத்துல இருக்கறவங்க உயிரையும் பணயம் வெச்சு, கொரோனா காலத்துல வேலை பாத்தோம். எங்களுக்கு கூட கொரோனா வந்துச்சு. கஷ்டப்பட்டு வேலை பார்த்த எங்களை, மனசாட்சியே இல்லாம, வீட்டுக்கு போகச் சொல்லிட்டாங்கன்னு கண்ணீர் விடுறாங்க. அவுங்களுக்கு கலெக்டர் உதவி செய்றாரான்னு பார்ப்போம்,''செஞ்சிலுவை சங்கம் ரவுண்டானாவை கடந்தபோது, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை பார்த்த சித்ரா, ''போலீஸ் ஸ்டேஷன் எல்லை தகராறுனால, எட்டு மணி நேரமா, சடலத்தை எடுக்காம இருந்தாங்களாமே,''

''அதுவா, நரசாம்பதி குளத்துல ஒரு ஆண் சடலம் கெடந்திருக்கு; வடவள்ளி ஸ்டேஷனா, செல்வபுரம் ஸ்டேஷனான்னு பஞ்சாயத்து ஓடியிருக்கு. கமிஷனருக்கும், எஸ்.பி.,க்கும் தகவல் சொல்லியிருக்காங்க; பிரச்னை தீரலை,''

''விமர்சனம் வந்ததும், வடவள்ளி ஸ்டேஷன்ல இருந்து போயி, சடலத்தை மீட்டிருக்காங்க. இப்ப, செல்வபுரம் எல்லைன்னு வி.ஏ.ஓ., சர்ட்டிபிகேட் கொடுத்திருக்கிறதுனால, அந்த ஸ்டேஷனுக்கு வழக்கை மாத்தப் போறாங்களாம்,''

''மாமூல் வாங்குறதா இருந்தா, அடிச்சுப்பிடிச்சு போயிருப்பாங்க. இது, வில்லங்கமான கேஸாச்சே,''

''நீங்க சொல்றதும் சரிதான்! சிங்காநல்லுார் காமாட்சிபுரம் செக்போஸ்ட்டை கடக்கவே லாரி டிரைவர்கள் பயப்படுறாங்க. வசூல் வேட்டை நடத்துறதுக்குன்னே, ஒரு குரூப் சுத்திட்டு இருக்குதாம். இவங்க மேல நடவடிக்கை எடுக்குறதுக்கு மூவ் பண்ணா, அரசியல் புள்ளிகள் கிட்டே போயிடுறாங்களாம். அதனால, ஏட்டுகளுக்கு கூட, உயரதிகாரிகள் பயப்படுற நிலைமை காவல்துறையில இருக்குதாம்,''

''அடக்கொடுமையே,'' என்றபடி, கலெக்டர் ஆபீஸ் வளாகத்துக்குள் ஸ்கூட்டரை நிறுத்தினாள் சித்ரா.''கார்ப்பரேஷன்ல துாய்மை பணியாளர்கள் கொந்தளிப்புல இருக்காங்களாமே,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள்.

''அதுவா, துாய்மை பணியாளரா வேலை பார்க்கறவங்கள்ல படிச்சவங்களுக்கு, இளநிலை உதவியாளர் 'போஸ்டிங்' கொடுக்கணும்னு கேட்டுட்டு இருந்தாங்க. திடுதிப்புன்னு ஒரே நாளில் நேர்காணல் நடத்தி, ராத்திரியோட ராத்திரியா, அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் அடிச்சு, மறுநாளே, வெளியாட்களை நியமிச்சிட்டாங்க. தொழிலாளர்கள் தரப்புல, கோர்ட்டுக்கு போயிருக்காங்க; கேஸ் நாளைக்கு விசாரணைக்கு வருது; ஒவ்வொரு தொழிலாளியும் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திட்டு இருக்காங்க,'' என்ற சித்ரா, சாம்பார் வடை, டீ ஆர்டர் கொடுத்தாள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X