புதுடில்லி : கொரோனாவுக்காக, பதஞ்சலி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட, 'கொரோனில்' மருந்து தொடர்பாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு, இந்திய மருத்துவ சங்கம் கேள்வி எழுப்பி உள்ளது.
யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம், கடந்த ஆண்டு, கொரோனா வைரசுக்காக, 'கொரோனில்' என்ற மருந்தை அறிமுகம் செய்தது. அந்த மருந்தின் அறிவியல்பூர்வ ஆய்வறிக்கையை, சமீபத்தில், பாபா ராம்தேவ் வெளியிட்டார். அந்த நிகழ்ச்சியில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனும், உடன் இருந்தார். அப்போது பேசிய ராம்தேவ், கொரோனில் மருந்துக்கு, மத்திய அரசும், உலக சுகாதார அமைப்பும் அங்கீகாரம் வழங்கி இருப்பதாக தெரிவித்தார்.
எனினும், 'எந்த பாரம்பரிய மருந்துக்கும் தாங்கள் அனுமதி வழங்கவில்லை' என, உலக சுகாதார அமைப்பு, திட்டவட்டமாக மறுத்தது.இதையடுத்து, அதற்கு விளக்கம் அளித்த பதஞ்சலி நிறுவனம், உலக சுகாதார அமைப்பு அனுமதி தரவில்லை என்றும், இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் மட்டுமே ஒப்புதல் அளித்ததாகவும் தெரிவித்தது.இதற்கு கண்டனம் தெரிவித்து, ஐ.எம்.ஏ., எனப்படும் இந்திய மருத்துவ சங்கம், நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சராக உள்ள நீங்கள், அறிவியல் பூர்வமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட ஒரு பொருளை, நாட்டு மக்களுக்காக அறிமுகம் செய்தது, எந்த வகையில் நியாயம்?
அந்த மருந்தை பரிசோதிக்க எடுத்துக் கொள்ளப்பட்ட கால அவகாசம் என்ன என்பதை, நீங்கள் கூற வேண்டும்.நாட்டு மக்களுக்கு, சுகாதாரத் துறை அமைச்சரிடம் இருந்து விளக்கம் தேவை. இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிகளை அவமதிக்கும் வகையில் செயல்பட்ட அமைச்சரிடம் இருந்து விளக்கத்தைப் பெற, தேசிய மருத்துவ கமிஷனுக்கு, கடிதம் எழுத உள்ளோம். உலக சுகாதார அமைப்பின் அனுமதி கிடைத்ததாக கூறிய பொய்யை கேட்டு, இந்திய மருத்துவ சங்கம் அதிர்ச்சிஅடைந்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE