பொன்னாடை அணிவிப்பு இல்லாமல், அரசியல் மற்றும் அரசு நிகழ்வுகள் இல்லை. 25 ஆண்டுகளுக்கு முன், சிறப்பு அழைப்பாளர்களுக்கு, கதர் துண்டு தான் கிட்டும். அதையே, கவுரவமாக கருதிய காலம் உண்டு.
இப்போதெல்லாம், கட்சியும் பெரிசு; கவுரவமும் பெரிசு. பட்டாடைகளும், பளபள பொன்னாடைகளும், கையில் இருந்தால் தான், மேடை ஏற, தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் அனுமதி கிடைக்கும். அவர்களால் மட்டுமே, வி.வி.ஐ.பி., பக்கத்தில் நின்று, போட்டோவுக்கு போஸ் கொடுக்க முடியும்.வசதிக்கு ஏற்ப வாங்கும் வகையில், பல விதங்களில், பல நிறங்களில், பொன்னாடை விற்பனை, படுஜோராக நடக்கிறது. அதுவும், தேர்தல் நேரத்தில் மொத்த விற்பனை, களை கட்டும்.இதில் என்ன சிறப்பு என்றால், பேசி முடித்து, சிறப்பு விருந்தினர் கீழே இறங்குவதற்குள், அத்தனை சால்வைகளும் மூட்டை கட்டப்பட்டு, காருக்கு போய் விடும்.
வி.ஐ.பி., வீடுகளில் தரம், ரகம் பிரித்து வாங்குவதற்கு என, ஜவுளி வியாபாரிகள் நிறைய பேர் இருக்கின்றனர். ஏற்கனவே மேடை ஏறிய, அதே பொன்னாடை, அடுத்த முறையும் மேடைக்கு வரும். நாளும், நேரமும், நிகழ்ச்சியும் எப்போது என்பது தான், அந்த அப்பாவி தொண்டர் அறியாத செய்தி.இந்த சால்வைகளை, சட்டைத் துணி போல, வேறு எதற்கும் பயன்படுத்த முடியாது. துணி கிழியும் வரை, ஒருவர் மாறி ஒருவர் தோளில் சவாரி செய்து கொண்டே இருக்கும். அதனாலேயே, சால்வை வேண்டாம்; பணமாக கொடுங்கள் என, பல அரசியல்வாதிகள் சொல்லத் துவங்கி விட்டனர்.
ஓரிருவர் மட்டும், புத்தகம் கேட்கின்றனர். படித்து பழகியவர்கள் பாவம்.சென்னையில், 'அம்மா மினி கிளினிக்' திறப்பு விழாவுக்கு வந்த, அமைச்சர் ஜெயகுமார் தோளில், ஏராளமான பொன்னாடைகள் ஏறின. பி.ஏ., மூலமாக, அவற்றை பத்திரமாக எடுத்து, காரில் ஏற்றினார். பிறகு, அந்த பொன்னாடைகளில் சிலவற்றை, டாக்டர், நர்ஸ், உதவியாளர்களுக்கு போர்த்தி, அமைச்சர் கவுரவித்தார். அவர்களும் மகிழ்ச்சியில் பூரிப்படைந்து, அமைச்சருடன், 'செல்பி' எடுத்துக் கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE