பணம் உள்ள போதே பட்டா வாங்கு... குணம் இல்லாதவரை வெளுத்து வாங்கு!

Updated : பிப் 23, 2021 | Added : பிப் 23, 2021 | |
Advertisement
திருமணம், கோவில் விசேஷம் என மக்கள் இயல்பு வாழ்க்கை திரும்பி விட்டதை, ரோட்டில் ஏற்பட்ட வாகன நெரிசலில் தெரிந்தது. சித்ராவும், மித்ராவும், தோழியின் திருமணத்துக்காக, காங்கயம் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர்.''என்னடி மித்து, இவ்ளோ டிராபிக். இனிமேல் நடந்துதான் போகணும்போல,''''உண்மைதாங்க்கா. இங்க கூட தேவலை. அவிநாசி, பெருமாநல்லுார், பல்லடம் இப்படி பல இடத்தில, முகூர்த்த
 பணம் உள்ள போதே பட்டா வாங்கு... குணம் இல்லாதவரை வெளுத்து வாங்கு!

திருமணம், கோவில் விசேஷம் என மக்கள் இயல்பு வாழ்க்கை திரும்பி விட்டதை, ரோட்டில் ஏற்பட்ட வாகன நெரிசலில் தெரிந்தது. சித்ராவும், மித்ராவும், தோழியின் திருமணத்துக்காக, காங்கயம் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர்.

''என்னடி மித்து, இவ்ளோ டிராபிக். இனிமேல் நடந்துதான் போகணும்போல,''

''உண்மைதாங்க்கா. இங்க கூட தேவலை. அவிநாசி, பெருமாநல்லுார், பல்லடம் இப்படி பல இடத்தில, முகூர்த்த நாட்களில், வண்டில போகவே முடியாதுங்க்கா...''

''கொரோனா டைம்ல, பஸ் இல்லாததால், பலரும் டூவீலர் வாங்கிட்டாங்க. ஏற்கனவே, 10 லட்சம் டூவீலர் ஓடற நிலையில, இப்ப இன்னும் ஜாஸ்தியாயிடுச்சு. அதனால, டிராபிக் ஜாம் ஆகத்தான் செய்யும்,''

''இத தீர்க்க ஒரே வழி. முக்கியமான ரோடுகளில் பாலம் கட்டறதுதான். அது மட்டுமே தீர்வாக முடியும் மித்து,''

''கரெக்டா சொன்னீங்க,'' என்ற மித்ரா, ''என்னக்கா,எலக் ஷன் நியூேஸ சொல்ல மாட்டேங்குறீங்க,''என, கேட்டாள்.

''பெரிசா சொல்ற மாதிரி இல்ல. இ.பி.எஸ்., ஸ்டாலின், கனிமொழி, கமல் வந்துட்டு போனதுதான் உனக்கு தெரியுமே. தேதி அறிவிச்சாதான் சூடு பிடிக்கும்,''

''நார்த், சவுத்தில், இப்டி ரெண்டிலும், போட்டியிடுவோம்னு, சூரியக்கட்சி நிர்வாகிகள் தீவிரமாக இருக்காங்க. அதேபோல, சவுத் எங்களுக்கு வேணும்னு, தோழர்கள் சொல்றாங்களாம். காங்., பத்தி பேச்ச காணோம்,''

''ஆளுங்கட்சியில, எப்படீங்க்கா...?'

'''அங்கயும் போட்டிதான். பல்லடம் வேணும்னு, தாமரை கட்சிக்காரங்க ரொம்பவே அடம் பிடிக்கறாங்க. சிட்டிங் சீட் கண்டிப்பா கெடைக்காதுனு இலைக்காரங்க சொல்றாங்க. இதனால, உச்சகட்ட குஸ்தி நடக்குதுடி,''

''இது கம்மிதாங்க்கா... தேதி அறிவிச்சா, அப்புறம் பாருங்க, செம கூத்து நடக்கும்,''

''மித்து, பெட்ரோல் அடிக்க மறந்துட்டேன்,'' என்ற சித்ரா, அருகில் இருந்த பங்க்குக்குள் வண்டியை ஓட்டினாள்.சில நிமிடங்கள் கழித்து வெளியே வந்ததும், ''இங்க பாருடி இவ்ளோ கூட்டம்,'' என்றதும், ''இதே ரோட்டுல, வளர்மதி கூட்டுறவு சங்கம் சார்பில் பெட்ரோல் பங்க் வைக்க ஏற்பாடு பண்ணாங்க. அந்த பங்க் வந்தால், நமக்கு வருமானம் பாதிக்கும்னு, சில பெட்ரோல் பங்க் ஓனர்ஸ், ஆட்களை செட்டப் செய்து, கோர்ட்டில் 'ஸ்டே' வாங்கிட்டாங்க,'' புதிய தகவலை சொன்னாள் மித்ரா.

''நம்மூரில் மட்டுந்தான், இப்படியெல்லாம் செய்வாங்க...''வாகனங்கள் அதிகமாகி நெரிசல் ஏற்படவே, மார்க்கெட் ரோடு வழியாக வண்டியை ஓட்டினாள் சித்ரா.

''ஏக்கா, மார்க்கெட்டிலுள்ள வேப்ப மரத்தில் பால் வழிந்ததாமே...''

''ஆமான்டி. இதைப்பார்த்து சில பெண்கள், மரத்துக்கு பொட்டு வைத்து, மாலை போட்டு, பூஜையும் செய்றாங்க. வழக்கம் போல, எதிர்ப்பு தெரிவிச்சு, 'பகுத்தறிவுவாதிகள்' சிலர் கலெக்டரிடம் புகார் செஞ்சிருக்காங்க...''

''அதெப்படிங்க்கா, எலக் ஷன் வந்தா மட்டும் இந்த பகுத்தறிவும், மத சார்பற்ற உணர்வும் எப்படி பொங்குதுன்னு தெரியல. தேர்தல் சமயத்தில் யாரும் இவர்களைக் கண்டுகொள்ளாததால் இந்த மாதிரி 'டாபிக்'கை துாக்கிட்டு கெளம்பிடறாங்க,''அப்போது, டிராபிக் போலீஸ் ஒருவர், ஒரு வழிப்பாதையில் சென்றவரை பிடித்து சத்தம் போட்டார்.

அதைப்பார்த்த சித்ரா, ''திருப்பூர் 'நார்த் டிராபிக்' போலீஸ் சிலர், மெஷினில் அபராதம் விதிக்காம, ரசீது போடறாங்கன்னு போன வாரம் பேசினோமில்ல. இந்த விஷயம் கமிஷனர் ஆபீஸ்க்கு போயிருக்கு. சம்பந்தப்பட்ட டிராபிக்கை சேர்ந்த ரெண்டு அதிகாரிகளை கூப்பிட்டு 'டோஸ்' விட்டாராம்,'' என்றாள்.

''பரவாயில்லீங்களே,'' என்ற மித்ரா, ''ஸ்டேஷன் அதிகாரி போனில் பேசாததால், 'சவுத்' வி.ஐ.பி., டென்ஷன் ஆயிட்டார்'' என புதிர் போட்டாள்.''என்ன விஷயம்டி?''

''ரெண்டு நாளைக்கு முன்னாடி, 'சவுத்' போலீஸ் ஸ்டேஷனுக்கு சிறுமியிடம் அத்துமீறல் தொடர்பாக புகார் போனது. ஆளும்கட்சிக்காரங்க, உடனே நடவடிக்கை எடுக்க சொல்லி ஸ்டேஷனில் பேசியிருக்காங்க,''

''ஆனா, 'சாப்ட்வேர் அப்டேட்' காரணமாக, உடனே நடவடிக்கை எடுக்க முடியாது. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க'னு அதிகாரி சொன்னதுக்கு, 'சவுத்' எம்.எல்.ஏ., வுக்கு போன போட்டு, அதிகாரியிடம் குடுத்தாங்க,''

''லைனில், 'சவுத்' இருக்கறது தெரியாம, கோபமாக பேசியிருக்காங்க. இதைக்கேட்டு, டென்ஷனாகி, நேரா, ஸ்டேஷனுக்கே கிளம்பி போயி சத்தம் போட்டார். ஒரு வழியாக இன்னொரு அதிகாரி தலையிட்டு, நடந்ததை சொல்லி சமாதானம் செஞ்சாங்களாம்,'' விளக்கினாள் மித்ரா.

அதே ரோட்டில், விவசாயிகள் கூட்டமாக சென்று கொண்டிருந்தனர். அதனை பார்த்த சித்ரா, ''கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம் 'சீக்ரெட்டாவே' இருக்காம். ஆபீசர் ஆய்வுக்கு வந்தா, 'சொசைட்டி'யில எந்த தகவலும் கொடுக்க மாட்டேங்கறாங்களாம்,''

''குறிப்பா, தள்ளுபடி விண்ணப்பத்துல, தலைவருங்க கையெழுத்து போட ரொம்பவே 'பிகு' பண்றாங்களாம். 'விஷயத்தை' எதிர்பார்த்து, கையெழுத்து போடுவதாக 'ஓபன் டாக்' உலா வருதுடி''

''நானும் கேள்விப்பட்டேங்க்கா. பிற மாவட்டத்தில், சட்சட்டுனு, ரசீது தர்றாங்க. நம்ம மாவட்டத்தில மட்டும் 'டிலே' பண்றாங்க,'' சொன்ன மித்ரா, ''சி.எம்., விசிட்டில், கோவை வி.ஐ.பி.,யை செம டோஸ் விட்டாராம்,'' என அடுத்த மேட்டருக்கு தாவினாள்.

''சி.எம்., பயண திட்டம் கரெக்டா போயிட்டு இருக்கறப்ப, தனியா ஆள் சேர்த்து, 'லோக்கல்' அரசியல் பண்ணிட்டு இருக்கீங்களா?னு கேட்டதற்கு,'சி.டி.சி., கார்னரில், மக்கள் கூட்டத்த பார்த்து முதல்வரே நின்று பேசிட்டாரு. நாங்க என்ன பண்றதுங்ணா'னு சொல்லி சமாதானம் பண்ணி, சமாளிச்சுட்டாங்களாம்,''

''இருக்காதா பின்ன, அவருதான், இந்த மூனு மாவட்டத்துக்கும் பொறுப்பு ஏத்திருக்கார். அதனாலதான், டென்ஷன் ஆயிருக்கார்,'' ஆமோதித்த சித்ரா, ''வார்டுக்கு, 25 ஆயிரம் ரூபாய் கொடுத்தாங்களாம்,'' என்றாள்.''எதுக்குங்க்கா?''

''அட, எதுக்கு குடுப்பாங்க. எல்லாம் 'எலக் ஷன்' செலவுக்குத்தான். அதிலயும், ஒரே வார்டை 'ஏ - பி'னு இரண்டா பிரிச்ச வார்டுகளில், ஒரு வார்டுக்கு பணம் போயிருக்காம்; மற்றொரு வார்டுக்கு போகலையாம். புகார் சொல்லப்போனவங்க கிட்ட, 'இதையெல்லாம் நீங்களே பேசி தீர்த்துக்கனும்'னு சொல்லி புதுசா வந்திருக்கிற நிர்வாகி திருப்பி அனுப்பிட்டாராம்,''

''கைக்கு எட்டினது, வாய்க்கு எட்டலையே'னு ரத்தத்தின் ரத்தங்களோட புலம்பல், கார்ப்ரேஷன் முழுசும் கேட்குதாம்,'' என சிரித்தாள் சித்ரா.

அப்போது, கம்ப்யூட்டர் சென்டர் ஒன்றின் முன், பட்டா விண்ணப்பம் கிடைக்கும் என்ற போர்டை படித்தவாறே, ''அக்கா, வேகவேகமா பட்டா குடுத்தாங்க தெரியுமா?'' கேள்வி கேட்டாள் மித்ரா.

''இல்லையே...''''எப்ப மனு வாங்கினாங்க? எப்படி பயனாளிகளை தேர்வு செஞ்சாங்கனு தெரியலை. தொகுதி வி.ஐ.பி., மூலமாக, பட்டா குடுத்துட்டு இருக்காங்க. இதில், இடைச்செருகலா, ஆளும்கட்சின்னு சொல்லிட்டு திரியற புரோக்கருங்க, 'சீக்கிரமா பட்டா வாங்கனும்னா கவனிச்சா தான் வேலை நடக்கும்'னு சொல்லி, அப்பாவி மக்கள் கிட்ட, பட்டாவுக்கு, 10 ஆயிரத்தை கறந்துட்டாங்களாம். எப்டியோ பட்டா கிடைச்சுதேங்குற சந்தோஷத்துல பலரும் வாங்கி கொடுத்துட்டாங்க,''

''இந்த எலக் ஷனால, இன்னும் என்னென்ன நடக்கப்போகுதோ, தெரியலையே,'' சொன்ன சித்ரா, அவிநாசி ரோட்டில் வண்டியை திருப்பினாள்.''லிங்கேஸ்வரர் ஊரில் உள்ள போலீஸ் பெண் அதிகாரி ஒருத்தர், 'போக்சோ' உட்பட குடும்ப தகராறு சம்பந்தமான வழக்குகளில், கட்டப்பஞ்சாயத்து பேசி, முடிஞ்சவரை 'வாங்கிட்டு'தான் வழக்கு பதிவு செய்றாங்களாம்,''

''அவரோட நடவடிக்கையை பார்த்து, ஸ்டேஷன் போலீஸ்காரங்க ரொம்பவுமே புலம்பராங்க. இத்தனைக்கு அவரை, மங்கலமான ஸ்டேஷனுக்கு டிரான்ஸ்பர் பண்ணியும் போகாம, இங்கயே, நங்கூரம் போட்டு உட்கார்ந்துட்டாங்க,'

'''அப்ப அவங்களுக்கு, ஏதோ ஒரு வி.ஐ.பி., யோட செல்வாக்கு இருக்குனு சொல்லுங்க,''''மே...பி,'' என்ற சித்ரா, ''புறம்போக்கு இடத்தை மீட்க, சொந்த கட்சிக்காரரே முட்டுக்கட்டை போட்டிருக்காரு,'' என, மீண்டும் ஆளுங்கட்சி மேட்டரை சொன்னாள் சித்ரா.

''எந்த ஊர்லக்கா...''

''குண்டடம் பக்கத்துல தும்பலம்பட்டியில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமிச்சு இருக்காரு. அதனை மீட்க, மக்கள் மனு கொடுத்தாங்க. தாசில்தாரும்ஆய்வு செஞ்சு, மீட்க உத்தரவிட்டார்,''

''ஆனா, இடத்தை ஆக்கிரமிப்பாளருக்கு ஆதரவா, ஆளுங்கட்சி நிர்வாகி ஒருவர் இருக்காராம். நல்லது பண்ற குணம் இல்லாதவரை வசை பாடிய மக்கள், அவரை பத்தி தலைமைக்கு புகார் சொல்ல ரெடியாயிட்டாங்க,'' என்று சொன்ன சித்ரா, வண்டியை பார்க்கிங் செய்தாள். 'செந்தில்குமார்' திருமண மஹால் என்ற பெயரிட்ட மண்ட பத்துக்குள், இருவரும் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X