கரூர் : தி.மு.க.,வில் தற்போது உள்ள, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கருணாநிதி, ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த பழைய வீடியோக்களை வெளியிட, அ.தி.மு.க.,வினர் திட்டமிட்டுள்ளனர்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி, அ.தி.மு.க.,வில் கரூர் மாவட்ட செயலராகவும், 2011 - 14ல் போக்குவரத்து துறை அமைச்சராகவும் இருந்தார். அப்போது, தி.மு.க., தலைவர் கருணாநிதி, ஸ்டாலினை, பொதுக்கூட்ட மேடைகளில் கடுமையாக, ஒருமையில் விமர்சனம் செய்தார்.மேலும், 2009ல் நடந்த, லோக்சபா தேர்தலில், கரூர் தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட கே.சி.பழனிசாமி, 2014ல் போட்டியிட்ட, தி.மு.க., விவசாய அணி மாநில செயலர் சின்னசாமி ஆகியோர் குறித்தும், செந்தில் பாலாஜி கடுமையான வார்த்தைகளால் வறுத்தெடுத்தார்.அந்த வீடியோ தொகுப்புகளை, அ.தி.மு.க.,வினர், தெருமுனை பிரசார கூட்டங்களில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர்.
அ.தி.மு.க.,வினர் கூறியதாவது:செந்தில் பாலாஜி, கட்சி மாறும் வரை, கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் மீதும், கரூர் மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் மீதும், கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த போது, போக்குவரத்து துறைக்கு, ஜி.பி.எஸ்., கருவிகள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது என, கருணாநிதியே கூறியுள்ளார். தி.மு.க., தொழிற்சங்கமும் போராட்டங்களை நடத்தியது.அ.ம.மு.க.,வில் செந்தில் பாலாஜி இருந்தபோது, தம்பி துரை, போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கரை தாக்கி பேசினார். தற்போது, தி.மு.க.,வில் சேர்ந்து, அ.தி.மு.க.,வை சுயநலத்துக்காக தாக்கி பேசி வருகிறார்.
இதனால், செந்தில் பாலாஜி, அ.தி.மு.க.,வில் இருந்தபோது, தி.மு.க.,வினரை தரக்குறைவாக பேசிய, வீடியோக்களை ஒளிபரப்ப ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. செந்தில் பாலாஜி, தி.மு.க., சார்பில், எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், இத்தகைய வீடியோக்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு, அவரது முகத்திரை கிழிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE