பல்லடம்:தேசிய நெடுஞ்சாலை என்றாலே, தற்போது, வாகனங்கள் வழுக்கிக்கொண்டு செல்லும் தரத்தில் இருக்கின்றன. ஆனால், பல்லடத்தில், கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, பல்லாங்குழி சாலையாகவும், விரிவுபடுத்தப்படாததாகவும், பல ஆண்டுகளாக தொடர்கிறது. இரண்டு கி.மீ., கடக்க, 15 முதல் 25 நிமிடங்கள் ஆகின்றன.
அரசியல் தலைவர்கள் அடிக்கடி வந்து சென்றாலும், இந்த சாலையின் நிலை மட்டும் மாறவில்லை.திருப்பூர் மாவட்டத்தில், முக்கிய போக்குவரத்து வழித்தடமாக, பல்லடம் உள்ளது. இங்கு, கோவை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூர், தாராபுரம் அவிநாசி, கொச்சி, பொள்ளாச்சி, உடுமலை ஆகிய ஆறு மாநில நெடுஞ்சாலைகள், இணைகின்றன. பைபாஸ் ரோடு பணிகள், இன்னும் துவங்கவில்லை.வாகனங்கள் செல்வதற்கான மாற்று வழித்தடங்கள், இங்கு கிடையாது. வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வரும் சரக்கு, மணல் லாரிகள், கன்டெய்னர்கள், ஆம்புலன்ஸ் உட்பட தினமும், ஆயிரக்கணக்கானவாகனங்கள், பல்லடத்தை கடக்கின்றன.வாகன போக்குவரத்து, நாளுக்கு நாள், பல மடங்கு அதிகரித்து வருவதால், நெரிசல் காரணமாக, விபத்துகள், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.சிக்கும் ஆம்புலன்ஸ்கள்பதினைந்து ஆண்டுக்கு முன் போடப்பட்ட ரோடு இன்று வரை அதே நிலையில் உள்ளது. ரோட்டின் இருபுறமும் போதிய இடம் இருந்தும், ஆக்கிரமிப்புகளை அகற்றவோ, விரிவாக்கம் செய்யவோ நடவடிக்கை எடுக்கப்படவில்லை.'பஞ்சர்' ஒட்டப்பட்ட பழைய ரோட்டில் உருவாகியுள்ள, மேடு, பள்ளங்கள், புழுதி, வாகன ஓட்டிகளை மிரட்டி வருகின்றன.
பனப்பாளையம் முதல் அண்ணா நகர் வரை உள்ள, இரண்டு கி.மீ., துாரத்தை கடக்க குறைந்தபட்சம், 15 முதல்- 25 நிமிடங்களுக்கு மேல் ஆகிறது. பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் வாகன 'பேரணி' நடைபெறுவது வழக்கம். உயிர் காக்கும் ஆம்புலன்ஸ்களும், வாகன நெரிசலில் சிக்கி திணறி செல்வதும் தொடர்கதையாக உள்ளது.அவசர கதியில் பணிசமீபத்தில், முதல்வர் பழனிசாமி பிரசாரத்துக்காக பல்லடம் வந்தார். அதை முன்னிட்டு, தேசிய நெடுஞ்சாலையில், படுகுழிகள் அவசர கதியில் களிமண் கொண்டு நிரப்பப்பட்டன. கடந்த இரண்டு நாட்கள், பெய்த மழையில், களிமண் கரைந்து, ரோட்டில் 'புழுதிப்புயல்' உருவாகி வாகன ஓட்டிகளின் கண்களை பதம்பார்த்து வருகின்றன.அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், அரசு துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர், இந்த ரோடு வழியாக பயணித்தாலும், ரோட்டின் பரிதாப நிலை மட்டும், பல ஆண்டுகளாக மாறாமல் இருக்கிறது.
விபத்து தொடர்கதை
நகர பகுதியில் வேகத்தின் அளவு, 30 கி.மீ., ஆகும். வெளி மாநில மாவட்டங்களில் இருந்து வரும் லாரிகள், கார், வேன் உள்ளிட்டவை நகரின் வேகக்கட்டுப்பாட்டை பின்பற்றுவதில்லை.வாகன நெரிசலுக்கு இடையே, கட்டுப்பாடற்ற வேகமும் இணைவதால் விபத்துகள் அதிகரிக்கின்றன. ஆண்டுதோறும், 20க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பதுடன், நுாற்றுக்கும் அதிகமானோரின் கை, கால்கள் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிறது.
போக்குவரத்தை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு யுத்திகளை கையாண்டும் அனைத்தும் தோல்வியிலேயே முடிகின்றன.உயிரிழப்பு, உடல் பாதிப்பு உள்ளிட்டவற்றால் எண்ணற்ற குடும்பங்கள், குடும்ப உறுப்பினர்களை இழந்து ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இவர்களின் இழப்புகளுக்கு யார் பொறுப்பேற்பது என்பது நீண்டகால கேள்வியாக உள்ளது.பல்லடத்தில் பைபாஸ் ரோடுகள் அமைந்தாலும், நகரின் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பு இல்லை. எதிர்காலத்தில் மேலும் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்பதால், பல்லடத்தில் மேம்பாலம் அமைக்க வேண்டியது கட்டாயம். தற்போதைய சூழலுக்கு ரோட்டை விரிவாக்கம் செய்வதும் அவசியம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE