போர்ட் லுாயிஸ் : மொரீஷியஸ் நாட்டுக்கு வந்துள்ள, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ''இங்கு நடக்கும் வளர்ச்சி திட்டங்களில் இந்தியா முக்கிய பங்காற்றும்,'' என, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர், ஆலன் கானுாவிடம் உறுதி அளித்தார்.
கிழக்கு ஆப்ரிக்க நாடான மொரீஷியசுக்கு, அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள, நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நேற்று, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர், ஆலன் கானுாவை சந்தித்து பேசினார்.அப்போது, ''இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவதுடன், மொரீஷியஸ் பொருளாதார மீட்பு மற்றும் வளர்ச்சி பணிகளில், இந்தியா முக்கிய பங்காற்றும்,'' எனக் கூறினார்.பின், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, பிரதமர் ஜுக்னாத்தை, வெளியுறவு அமைச்சர் சந்தித்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில், அவரது சிறப்பான பணிகளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தரப்பில், பாராட்டுகளை தெரிவித்தார்.
வணிக ரீதியில், நம் நாட்டில் தயாரான, ஒரு லட்சம், 'டோஸ்' கொரோனா தடுப்பூசி மருந்தை வழங்கினார்.இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, அந்நாட்டின் பாதுகாப்பிற்காக இந்தியாவில் இருந்து ராணுவ தளவாடங்கள் கொள்முதல் செய்வதற்கு, 750 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது.அடுத்ததாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, அந்நாட்டு அதிபர் பிருத்விராஜ்சி ரூபனையும் சந்தித்து பேசினார்.மொரீஷியசின் மக்கள் தொகையில், 70 சதவீதத்தினர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். அவர்களது மூதாதையர், பிரிட்டிஷ் ஆட்சியின் போது, ஒப்பந்த தொழிலாளர்களாக, இங்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE