சென்னை : திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளை, கூட்டணி கட்சிகளுக்கு தாரை வார்ப்பதற்கு, அ.தி.மு.க., - தி.மு.க.,வில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில், திருவொற்றியூர், மாதவரம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருத்தணி, பூந்தமல்லி, மதுரவாயல், அம்பத்துார், ஆவடி, திருவள்ளூர் ஆகிய, 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. லோக்சபா தேர்தலில், திருவள்ளூர் தொகுதியை, காங்., கட்சிக்கு, தி.மு.க., விட்டு கொடுத்தது.அக்கட்சி வேட்பாளர் ஜெயகுமார், அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். லோக்சபா தொகுதியை, தி.மு.க., விட்டு கொடுத்ததை, அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விரும்பவில்லை. கட்சி தலைமை அறிவித்ததால், வேறு வழியின்றி, தேர்தல் பணியை செய்தனர்.
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில், ருசி கண்ட பூனையாக, காங்., கட்சி உள்ளது. ஆவடி, அம்பத்துார், கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதிகளில் போட்டி யிடுவதற்கு, காங்., விருப்பம் தெரிவித்து உள்ளது.இதேபோல, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பொன்னேரி அல்லது பூந்தமல்லி ஆகிய இரண்டு தனி தொகுதிகளில் ஒன்றை கேட்டு வருகிறது. மாதவரம் தொகுதியை, ம.தி.மு.க.,வும், மதுரவாயல் தொகுதியை, இந்திய கம்யூ., கட்சியும் எதிர்பார்க்கின்றன. தொழிலாளர்கள் நிறைந்த திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட, மார்க்சிஸ்ட் கட்சி விருப்பம் தெரிவித்துள்ளது.
இது, தி.மு.க., நிர்வாகி கள் மற்றும் தொண்டர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல, அ.தி.மு.க., கூட்டணியில், மாதவரம், கும்மிடிப்பூண்டி, அம்பத்துார் தொகுதி களில், இரண்டை வழங்க வேண்டும் என, பா.ம.க., விருப்பம் தெரிவித்து உள்ளது. கூட்டணி உறுதியாகாத நிலையில், தே.மு.தி.க.,விற்கு, கும்மிடிப்பூண்டி மற்றும் மாதவரம் தொகுதியை கேட்பதற்கு, அக்கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர். இதனால், அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், வாயடைத்து நிற்கின்றனர்.கூட்டணி கட்சிகளுக்கு, 'சீட்' ஒதுக்காமல், 10 தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும் என, அ.தி.மு.க., - தி.மு.க., நிர்வாகிகள், தங்கள் கட்சி தலைமையிடம் வலியுறுத்த துவங்கிஉள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE